JobVibe.lk - Sri Lanka Job Portal

கல்முனை, அக்கறைப்பற்று மாநகர சபைகளுக்கு கொழும்பு மாநகர சபையினால் தீயணைப்பாளர்களுக்கான அங்கிகள், பாதுகாப்பு உபகரணங்கள் அன்பளிப்பு.!

(அஸ்லம் எஸ். மெளலானா)

கல்முனை மாநகர சபை மற்றும் அக்கறைப்பற்று மாநகர சபை ஆகியவற்றுக்கு கொழும்பு மாநகர சபையினால் தீயணைப்பு வீரர்களுக்குரிய பெறுமதியான தீயணைப்பு அங்கிகள் மற்றும் ஒரு தொகுதி தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை கொழும்பு மாநகர சபையில் கொழும்பு மாநகர மேயர் விராய் கெலி பஸ்தசார், கல்முனை மாநகர சபையினதும் அக்கறைப்பற்று மாநகர சபையினதும் ஆணையாளர் என்.எம். நௌபீஸ் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்றது.

கல்முனை மாநகர சபை மற்றும் அக்கறைப்பற்று மாநகர சபை என்பவற்றின் தீயணைப்பு சேவையை மேம்படுத்தும் பொருட்டு ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள், கொழும்பு மாநகர சபையிடம் விடுத்த வேண்டுகோளை ஏற்று மேயர் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டிருந்தார்.

கொரிய அரசாங்கத்தினால் கொழும்பு மாநகர சபைக்கு நன்கொடையாக வழங்கப்பட்ட தீயணைப்பு அங்கிகள் மற்றும் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களில் இருந்து ஒரு தொகுதியே கல்முனை மற்றும் அக்கறைப்பற்று மாநகர சபைகளுக்கு இவ்வாறு வழங்கப்பட்டிருக்கின்றன.

இதற்காக கொழும்பு மாநகர சபையின் மேயர் மற்றும் ஆணையாளர் ஆகியோருக்கு கல்முனை மற்றும் அக்கறைப்பற்று மாநகர சபைகளின் ஆணையாளர் என்.எம். நௌபீஸ் அவர்கள் இந்நிகழ்வின்போது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.








Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال