JobVibe.lk - Sri Lanka Job Portal

போதைப்பொருள் பாவனை நாட்டை சீரழித்து வரும் நிலையில், அது பாடசாலை மாணவர்களையும் சென்றடைந்திருப்பது எதிர்காலத்திற்கு பெரும் ஆபத்தாகும் – கலாநிதி அன்வர் முஸ்தபா

நூருல் ஹுதா உமர் 

போதைப்பொருள் பாவனை நாட்டை சீரழித்து வரும் நிலையில், அது பாடசாலை மாணவர்களையும் சென்றடைந்திருப்பது இலங்கையின் எதிர்காலத்திற்கு பெரும் ஆபத்தாகும் என ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும், சிலோன் இன்ஸ்டியூட் ஒப் மேனஜ்மென்ட் சயன்சஸ் தவிசாளருமான கலாநிதி அன்வர் எம். முஸ்தபா தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா ஜனநாயகக் கட்சியின் ஒத்துழைப்புடன் அல்-மீஸான் பௌண்டஷன் – ஸ்ரீலங்கா ஏற்பாட்டில் கலாநிதி அன்வர் எம். முஸ்தபா தலைமையில் நடைபெற்ற ‘PEARLS – SEASON 07’ கல்விச் சிறப்பு மற்றும் கௌரவிப்பு நிகழ்வு சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பிள்ளைகள் மீது பெற்றோர்கள் அதீத கவனம் செலுத்த வேண்டிய காலகட்டம் இது. பாடசாலை நிர்வாகம் அனைத்து விடயங்களுக்கும் முழுமையாகப் பொறுப்பேற்பது நடைமுறைச் சாத்தியமற்றது. எனவே, பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் சமூகத்தினர் இணைந்து இளைஞர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்றார்.

கல்வியால் மட்டுமே நாம் சிறந்த மனிதர்களாகவும், பொறுப்புள்ள பிரஜைகளாகவும் வாழ முடியும். ஒரு சமூகத்தை வீழ்த்த வேண்டுமாயின் அதன் கல்வியையும் பொருளாதாரத்தையும் வீழ்த்தினால் போதுமானது. எனவே, நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்க கல்வி மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இன்றைய நிலையில் பல்கலைக்கழக பட்டங்கள் பலவும் தொழில் சந்தையின் தேவைகளுக்கு முழுமையாகப் பொருந்தாத நிலை ஏற்பட்டுள்ளது. பட்டதாரிகள் அரச தொழில்களை மட்டுமே நம்பியிருக்க முடியாது. உலக தொழில் சந்தைக்கு ஏற்றவாறு இலங்கையின் கல்வி முறை மாற்றியமைக்கப்பட வேண்டும். மாணவர்களை வெறுமனே பட்டதாரிகளாக உருவாக்காமல், திறமையான தொழில்முனைவோர் மற்றும் எதிர்காலத்தை உருவாக்கக்கூடிய புத்தாக்க சிந்தனையாளர்களாக உருவாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் உலகின் பல நாடுகள் வேகமாக முன்னேறி வரும் நிலையில், அதற்கேற்ப இலங்கை முன்னேறவில்லை. இந்நிலையை மாற்றுவதற்கு நவீன தொழில்நுட்பம், திறன் அடிப்படையிலான கல்வி மற்றும் உலகளாவிய தொழில் வாய்ப்புகளுக்கு ஏற்ற பயிற்சிகள் கல்வி முறையில் உள்வாங்கப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

அத்துடன், இளைஞர்களை நேர்வழிப்படுத்துவதற்கும் கல்வி மற்றும் சமூக முன்னேற்றத்தை ஊக்குவிப்பதற்கும் அல்-மீஸான் பௌண்டஷன் முன்னெடுத்து வரும் வேலைத்திட்டங்கள் பாராட்டுக்குரியவை எனத் தெரிவித்த கலாநிதி அன்வர் முஸ்தபா, இவ்வாறான சமூகப் பொறுப்புமிக்க செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

கல்வித்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய கல்வியாளர்களையும், கல்வியில் சாதனை படைத்த மாணவர்களையும் பாராட்டி கௌரவிக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட ‘PEARLS – SEASON 07’ நிகழ்வில் பல்வேறு கல்வியாளர்கள், மாணவர்கள், பெற்றோர் மற்றும் சமூகப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.





Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال