JobVibe.lk - Sri Lanka Job Portal

மூதூர் பதட்டமும், பழிவாங்கும் நடவடிக்கையும், ஜிஹாத் அமைப்பும்.

பத்தாவது தொடர்............

மூதூரில் தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கிடையில் தொடர்ந்து பதற்றம் இருந்ததுடன், படைகளின் நடவடிக்கைகள் பொதுமக்களின் வாழ்வியலை பாதித்தன. அப்போது மூதூர் பகுதியானது இலங்கையிலிருந்து துண்டிக்கப்பட்டு தனியான தீவு போன்று தரைவழிப் பாதைகளோ, பாலங்களோ இருக்கவில்லை. 

திருகோணமலையிலிருந்து படகுகள் மூலமாக ஒரு மணி நேர பயணத்துக்கு பின்புதான் மூதூரை சென்றடைவார்கள். படகுகள் கடலில் கவிழ்ந்து மரணித்த சம்பவங்கள் ஏராளம் உள்ளது. அத்துடன், அருகில் உள்ள கிண்ணியாவுக்கு செல்வதென்றாலும் படகுகள் மூலமாக செல்ல வேண்டுமே தவிர தரைவழிப் பாதைகள் இருக்கவில்லை. 

மூதூரின் தெற்குப்புறம் மற்றும் சம்பூர் பகுதிகள் LTTE யினரின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் இருந்தது.   

மூதூரின் உதவி அரசாங்க அதிபர் ஹபீப் முகம்மது 03.09.1987 அன்று பள்ளிவாசலில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் கிழக்கு முழுவதும் பதட்டத்தை ஏற்படுத்தியது. இதற்கு அரச தரப்பு LTTE யை குற்றஞ்சாட்டியது, ஆனால் அதனை LTTE மறுத்திருந்தது. 

இந்திய படையினரின் வருகைக்கு பின்பு அங்கு EPRLF, TELO, ENDLF போன்ற இந்திய ஆதரவு இயக்கங்கள் கிழக்கில் அதிகாரம் செலுத்தத் தொடங்கியதுடன், மூதூரில் EPRLF - முஸ்லிம் உறவு மிக மோசமாக இருந்தது. 

EPRLF இயக்கத்துடன் ஏற்பட்ட முறுகல் காரணமாக, ஜிஹாத் இயக்கத்தினர் என்ற போர்வையில் பல முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த கைதினை கண்டித்து EPRLF அலுவலகத்தை முஸ்லிம் இளைஞர்கள் தாக்கியதாகவும், அதற்கு பதிலடியாக முஸ்லிம்களின் வீடுகளை EPRLF இயக்கத்தினர் உடைத்ததாகவும் UTHR குறிப்பிட்டுள்ளது.   

இந்தியப் படையினர் இருந்தபோது மூதூரில் முஸ்லிம்கள் மீது தமிழ் ஆயுதக் குழுக்கள் 12 October 1987 அன்று தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலினால் முஸ்லிம்கள் பலர் கொல்லப்பட்டதுடன், வீடுகள், கடைகள் எரிக்கப்பட்டன. இதனால் மூதூரில் இருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கிண்ணியா, திருகோணமலை ஆகிய பிரதேசங்கள் மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களுக்கு இடம்பெயர்ந்தனர். 

மூதூரில் முஸ்லிம்கள் தாக்கப்பட்டதற்கு பழிவாங்கும் நோக்கில் சில முஸ்லிம் இளைஞர்கள் தமிழ் பொதுமக்கள் மீது தாக்குதல்களில் ஈடுபட்டதாக UTHR பதிவு செய்யப்பட்டுள்ளது. 

மூதூர் முஸ்லிம்களுக்கான நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த A.L.A. Abdul Majeed, முன்னாள் பிரதி அமைச்சர் 13.11.1987 அன்று சுட்டுக்கொல்லப்பட்டார். இதனால் மூதூர் முஸ்லிம்கள் மத்தியில் பாதுகாப்பு அச்சம் மேலும் அதிகரித்தது.

1988 ல் மூதூர் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டதாக பதிவுகள் உள்ளது. 19.03.1988 மூதூரில் 2 முஸ்லிம்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.  

25.03.1988 மூதூர் கடற்கரைப் பகுதியில் பல முஸ்லிம் மீனவர்கள் சுடப்பட்டதுடன், 9 பேர் காணாமல் போனதாகவும், அடுத்த நாள் சில உடல்கள் கடற்கரையில் கரை ஒதுங்கியதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

1989 இல் இந்தியப் படையுடன் LTTE மோதல் தீவிரமடைந்ததால் மூதூர் மீண்டும் ஒரு முக்கிய இராணுவப் பகுதியாக மாறியது. அதே நேரத்தில் EPRLF, TELO, ENDLF போன்ற இந்திய படையினரின் ஆதரவு குழுக்களும் LTTE யும் ஒன்றுக்கொன்று மோதலில் ஈடுபட்டன. 

இந்த மோதலில் முஸ்லிம்கள், ஒருபுறம் தமிழ் ஆயுதக் குழுக்களாலும், மறுபுறம் LTTE யினரின் நடவடிக்கைகளாலும் சிக்கியிருந்தனர்.

1990 ஜூனில் இரண்டாவது ஈழப்போர் தொடங்கியபோது மூதூர் மீண்டும் மிக முக்கிய போர்ப் பகுதியாக மாறியது. கடத்தல், கப்பம், அச்சுறுத்தல் பின்பு மூதூரைவிட்டு வெளியேறுமாறு எச்சரிக்கை. போன்ற நடவடிக்கைகள் இருந்ததாக மனித உரிமை ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

1987 இல் ஏற்பட்ட கடுமையான இன முறுகலுக்கு பின்னரும் 1988 – 89 காலத்தில் சில முஸ்லிம்கள் LTTE க்கு ஆதரவளித்தனர். இந்திய படையினர் வெளியேறிய பின்பு சில முஸ்லிம் பகுதிகளில் LTTE க்கு எதிர்பாராத வரவேற்பும் இருந்தது. பின்னர் 1990 ஜூன் போர் தொடங்கிய பின்பு அந்த உறவு முற்றாக முறிந்தது. 

இரண்டாம் ஈழப்போர் தொடங்கியபின்பு பல முஸ்லிம்கள் வெவ்வேறு சம்பவங்களில் கொல்லப்பட்டனர். இதற்கு எதிராக LTTE யின் நடவடிக்கைக்குப் பழிவாங்கும் நோக்கில், 19.09.1990 அன்று 17 தமிழர்கள் கடத்தப்பட்டு கடற்கரையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பற்றி அறிக்கை குறிப்பிடுகிறது.  

எனவேதான் மூதூர் பகுதியில் முஸ்லிம் இளைஞர்கள் மேற்கொண்ட பதில் நடவடிக்கைகளுக்கு “ஜிஹாத் அமைப்பு” காரணம் என்று அதிகமாக பேசப்பட்டது. அது பற்றி அடுத்துவரும் “ஜிஹாத்” பற்றிய தொடர்களில் விரவாக ஆராய்வோம்.  

தொடரும்..............

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال