JobVibe.lk - Sri Lanka Job Portal

பெண்கள் தமது மத மற்றும் கலாச்சார ஆடைகளுடன் தொழில் செய்யும் உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும்...! -கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எம். பி. கோரிக்கை

அண்மையில் முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் தனது கலாச்சாரத்திற்கும் மதத்திற்கும் அமைவான ஆடை அணிந்து கடமைக்கு சென்றதற்காக திருப்பி அனுப்பப்பட்ட சம்பவம் ஏற்றுக்கொள்ள முடியாதது என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

மகளிர் விவகார, சிறுவர் அபிவிருத்தி மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் பிரதான விவாதத்தில் இன்று (10) கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

மகளிர் மற்றும் சிறுவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதும், அவர்களது நலனை உறுதிப்படுத்துவதும் இந்த அமைச்சின் முக்கியமான பொறுப்பாகும்.

அந்த வகையில், முஸ்லிம் பெண்கள் தங்களுடைய மதம் மற்றும் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஆடைகளை அணிந்துகொண்டு தங்களுடைய தொழில்களை மேற்கொள்வதற்கான உரிமையும் பாதுகாக்கப்பட வேண்டும்.

கல்முனை வைத்தியசாலையில் கடமைக்குச் சென்ற முஸ்லிம் சுகாதார உதவியாளர்கள், தனது மதம் மற்றும் கலாச்சாரத்திற்கு அமைவான ஆடை அணிந்திருந்த காரணத்தினால் வைத்திய அத்தியட்சகரால் திருப்பி அனுப்பப்பட்டு, பின்னர் அவர்கள் வேறு வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

இது உண்மையிலேயே ஏற்றுக்கொள்ள முடியாத விடயமாகும்.

கடந்த 35–40 ஆண்டுகளாக முஸ்லிம் பெண்கள் தங்களுடைய கலாச்சாரத்திற்கும் மதத்திற்கும் அமைவான ஆடைகளை அணிந்துகொண்டு தாதியர்களாகவும், சுகாதாரத் துறையின் ஏனைய பணிகளிலும் எவ்வித பிரச்சினைகளுமின்றி கடமையாற்றி வருகின்றனர்.

எனவே, இந்த விடயத்தில் மகளிர் விவகார அமைச்சருக்கும் மிகுந்த பொறுப்பும் கடமையும் இருக்கின்றது.

முஸ்லிம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்கள் தங்களுடைய மதம் மற்றும் கலாச்சாரத்திற்கு அமைவான ஆடைகளுடன் எவ்வித தடையுமின்றி தங்களுடைய தொழிலை மேற்கொள்வதற்கான உரிமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இது சுகாதார அமைச்சின் பொறுப்பு மாத்திரமல்ல. மகளிரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்குப் பொறுப்பான அமைச்சும் இந்த விடயத்தில் உரிய தலையீட்டை மேற்கொள்ள வேண்டும்.

எந்தவொரு பெண்ணும் தனது மதம், கலாச்சாரம் அல்லது ஆடை காரணமாக தனது தொழில் உரிமையை இழக்கக் கூடாது. நாட்டிலுள்ள அனைத்து பெண்களுக்கும் சம உரிமையும் சம வாய்ப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் எம்.பி. வலியுறுத்தினார்.

-- ஊடகப்பிரிவு



Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال