JobVibe.lk - Sri Lanka Job Portal

முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக சட்டரீதியான ஆயுதங்களை கோரிய அஷ்ரப்.

12 வது தொடர்........... 

1987 இல் இந்திய - இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தானதுடன், வடக்கு – கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்கள் ஒரே மாகாணமாக இணைக்கப்பட்டன. குறித்த மாகாணங்களில் வாழ்கின்ற இன்னுமொரு சமூகமான முஸ்லிம் தரப்புடன் இந்த ஒப்பந்தம் பற்றி எந்தவித கலந்துரையாடலும் மேற்கொள்ளப்படவில்லை. 

வடகிழக்கு ஒரே மாகாணமாக இணைக்கப்பட்டதன் மூலமாக முஸ்லிம்களின் விகிதாசாரம் 17 சதவீதமாக குறைக்கப்பட்டது. இந்நாட்டில் எட்டு சதவீதமாக வாழ்கின்ற முஸ்லிம்கள், இந்த ஒப்பந்தம் மூலமாக அரசியல் அநாதையாக்கப்பட்டனர்.  

அமைதிப் படையினர் என்ற அடையாளத்துடன் வந்திறங்கிய இந்திய படையினரினால் எந்தவித அமைதியையும் ஏற்படுத்தவோ, முஸ்லிம் மக்களை பாதுகாக்கவோ முடியவில்லை, மாறாக தமிழ் ஆயுத இயக்கங்களின் அட்டகாசங்களுக்கும், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் இந்திய படையினரும் துணை போனார்கள். இதனால் கிழக்கில் உள்ள முஸ்லிம் கிராமங்கள் தொடர்ச்சியான பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொண்டது. 

இவ்வாறான கெடுபிடிகள் காரணமாக தமது எதிர்கால பாதுகாப்பு, தனித்துவ அரசியல் பற்றி முஸ்லிம் தரப்பினர் கடுமையாக சிந்திக்க ஆரம்பித்தனர். இந்த காலகட்டத்தில்தான் பேச்சளவில் இருந்துவந்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஓர் அரசியல் கட்சியாக 1988 இல் தேர்தல் செயலகத்தில் பதிவு செய்யப்பட்டது. 

வடகிழக்கு மாகாணசபை தேர்தலை நடத்துவதற்காண ஏற்பாடுகளை இந்தியா மேற்கொண்டது. ஆனால் LTTE அதற்கு தடை விதித்ததுடன், தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தது. இதனால் தமிழ் அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் பின்வாங்கிய நிலையில் EPRLF, ENDLF ஆகிய இயக்கங்கள் தமிழ் தரப்பில் தேர்தலில் போட்டியிட முன்வந்தது. 

ஆனால் முஸ்லிம் சமூகத்தின் சார்பில் வேட்பாளர்களை நிறுத்த வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கு இருந்தது. இதனால் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சு நடாத்தி உரிய பாதுகாப்பும், தேர்தலுக்கான செலவுகளை வழங்க இந்தியா முன்வந்ததன் காரணமாக, வடகிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உடன்பட்டது. 

அந்தவகையில் வடகிழக்கு மாகாணசபை தேர்தல் 19 நவம்பர் 1988 அன்று இந்திய படையினரின் பலத்த பாதுகாப்புடன் நடைபெற்றது. இந்த தேர்தலில் 71 மொத்த உறுப்பினர்களில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் 17 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். மற்றும் EPRLF 41, ENDLF 12, UNP 1 ஆகிய உறுப்பினர்கள் தெரிவானார்கள். 

EPRLF தலைமையிலான வடகிழக்கு மாகாணசபை ஆட்சியில் முதலமைச்சராக வரதராஜ பெருமாளும், எதிர்க்கட்சித் தலைவராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர் சேகு இஸ்சடீனும் 10 December 1988 அன்று பதவி ஏற்றனர்.  

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக தெரிவு செய்யப்பட்ட மாகாணசபை உறுப்பினர்களுக்கு பாதுகாப்பும், வாகனமும் இந்தியாவால் வழங்கப்பட்டது. 

ஆனாலும் வடகிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிட்ட அனைவருக்கும் LTTE யினர் மரண தண்டனையை அறிவித்திருந்தனர்.   

முஸ்லிம்களுக்கு எதிரான தமிழ் ஆயுத இயக்கங்களின் கெடுபிடிகள் மற்றும் பலத்த அச்சுறுத்தல் காரணமாக, இந்த தேர்தலில் முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து தங்களது ஒற்றுமையினை வெளிப்படுத்தியிருந்தனர்.  

இந்த ஒற்றுமையின் மூலமாக கிழக்கு மாகாணத்தில் அசைக்க முடியாத தனிப்பெரும் அரசியல் சக்தி என்ற அங்கீகாரத்தினை முஸ்லிம் மக்கள், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்கியிருந்தனர். இதற்கான அனைத்து பெருமைகளும் தமிழ் ஆயுத இயக்கங்களின் நடவடிக்கைகளேயே சாரும்.

வடகிழக்கில் இந்தியப் படையினருடனான LTTE யினரின் தாக்குதல் அதிகரித்ததுடன், மாகாண சபையையும் அவர்கள் இலக்கு வைத்தனர். இந்தியப் படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலேயே மாகாணசபை இயங்கியது. எங்கும் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தது. குறிப்பாக முஸ்லிம் கிராமங்கள்தோறும் எல்லைகளில் இருந்துவந்த பதட்டம் குறையவில்லை.  

இந்த நிலையில், மூன்று இனங்கள் வாழ்கின்ற இந்த நாட்டில் சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும் அம்மக்களை பாதுகாக்க ஆயுதம் தாங்கிய படையினர்கள் இருக்க முடியுமென்றால், எட்டு சதவீதமாக வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு மாத்திரம் ஏன் அவ்வாறு இருக்க முடியாது ? முஸ்லிம்களின் பாதுகாப்பு விடயத்தில் எவரையும் நம்ப முடியாது. எங்களது பாதுகாப்பினை நாங்களே மேற்கொள்ள வேண்டும். 

எனவே முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக சட்டரீதியான ஆயுதங்களை அரசு வழங்க வேண்டுமென்று தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் பகிரங்கமாக கோரிக்கை விடுத்தார். 

தொடரும்.............

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال