ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக ஓட்டமாவடியைச் சேர்ந்த சட்டத்தரணி ஹபீப் றிபான் கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமினால் இன்று (21) திங்கட்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
பொத்துவில் அப்துல் பாசிதின் இராஜினாமாவை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே றிபான் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனம் தொடர்பில் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் நிசாம் காரியப்பரினால் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினராக சட்டத்தரணி றிபானின் பெயர் இன்று அல்லது நாளை தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வர்த்தமானியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம், செயலாளரர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், தவிசாளர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், தேசிய அமைப்பாளர் எம்.எஸ். உதுமாலெப்பை, கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான அம்பாறை மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன் மற்றும் மௌலவி ஹாமித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நியமனம் குறித்து சட்டத்தரணி ஹபீப் றிபான் தெரிவிக்கையில்
கல்குடா மக்கள் சார்பாக இத்தீர்மானத்தை எடுத்த கட்சியின் தேசியத் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் அவர்களுக்கும், அதற்கு உறுதுணையாக நின்ற கட்சியின் தவிசாளரும், மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களுக்கும் கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் அவர்களுக்கும் மற்றும் கட்சியின் அனைத்து நிர்வாகிகளுக்கும் கல்குடா மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக சட்டத்தரணி ஹபீப் றிபான் தெரிவித்தார்.



