(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இரசாயன, உயிரியல், கதிரியக்க மற்றும் அணுசக்தி ஆபத்து ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சிப் பாடநெறியொன்று ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் புதன்கிழமை (2026 செப்டம்பர் 16) கடற்படையினரால் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இதன்படி, தெற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் காவன்திஸ்ஸ நிறுவனத்தின் இரசாயன, உயிரியல், கதிர்வீச்சு மற்றும் அணுசார் பிரிவினால் (Chemical, Biological, Radiological, and Nuclear - CBRN) ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயிற்சிப் பாடநெறியில், அவசர இரசாயன, உயிரியல், கதிர்வீச்சு மற்றும் அணுசார் ஆபத்துச் சூழ்நிலையின் போது எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்த கோட்பாடு மற்றும் செய்முறை அமர்வுகளில் இலங்கை துறைமுக அதிகாரசபை, குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் உள்ளிட்ட அரச மற்றும் தனியார் பங்குதாரர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி பிரதிநிதிகள் குழுவொன்று கலந்துகொண்டது.
இதன் கோட்பாடு அமர்வின் போது, இரசாயன ஆபத்துகளைக் கண்டறிதல், அடையாளப்படுத்துதல், பாதுகாப்பு வழிமுறைகள் மற்றும் மீட்பு முறைகள் குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டதுடன், மேலும், இதன் செய்முறை அமர்வின் மூலம் அவசர இரசாயன ஆபத்தின் போது பொருத்தமான பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் சாதனங்களை முறையாகக் கையாளுதல், நபர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுதல் மற்றும் அபாயகரமான இரசாயனச் சேர்வைகளைப் பாதுகாப்பாக அகற்றும் உத்திகள் குறித்தும் விழிப்புணர்வூட்டப்பட்டது.







