எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் தள வைத்தியசாலையின் புதிய மருத்துவ அத்தியட்சகராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் லசித்த மலலசேகர அவர்களை வரவேற்கும் நிகழ்வும், இதுவரை மருத்துவ அத்தியட்சகராக சேவையாற்றிய டாக்டர் லசந்த லியனகே அவர்களுக்கு கௌரவமான பிரியாவிடை வழங்கும் நிகழ்வும் (01) செவ்வாய்க்கிழமை இரவு புத்தளம் ICE Talk Family Restaurant-இல், புத்தளம் பெரிய பள்ளியின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
புத்தளம் சமூகத்தின் அரசியல் மற்றும் சமூகத் தலைமைகள், வைத்திய சாலை அபிவிருத்தி குழுவினர், வைத்தியர்கள், உலமாக்கள், சர்வமதத் தலைவர்கள், புத்திஜீவிகள், வர்த்தக சமூக பிரதிநிதிகள் மற்றும் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல், புத்தளம் மாநகர முதல்வர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத், புத்தளம் வர்த்தக நலன்புரிச்சங்க தலைவர் எஸ்.எச்.எம்.ஜப்ரிஸ், புத்தளம் ஜம்இய்யத்துல் உலமா தலைவர் அஷ்ஷேக் ஜிப்னாஸ் அல்மிஸ்பாஹி, பெரிய பள்ளி தலைவர் ஆசிரியர் எஸ்.ஆர்.எம்.சலீம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
புத்தளம் தள வைத்தியசாலைக்கும், மக்களுக்கும் சிறப்பான சேவையாற்றிய முன்னாள் மருத்துவ அத்தியட்சகர் Dr. Lasantha Liyanage அவர்களின் சேவைகள் இதன்போது பாராட்டப்பட்டதுடன், புதிய மருத்துவ அத்தியட்சகர் Dr. Lasitha Malalasekara அவர்களுக்கு அனைவரினதும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டன.
புத்தளம் மக்களுக்கான சுகாதார சேவைகளை மேலும் வலுப்படுத்துவதற்கு மருத்துவத் துறை, அரச நிறுவனங்கள் மற்றும் சமூக அமைப்புகள் ஒன்றிணைந்து செயற்படுவது மிகவும் முக்கியமானதாகும்.
இதன்போது கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பைசல், புத்தளம் தள வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்காக தன்னுடன் இணைந்து பாடுபட்ட மாநகர முதல்வர், வைத்தியர்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றிகளைத் தெரிவித்தார்.
பல தசாப்தங்களாக நிறைவேற்ற முடியாமல் இருந்த இந்த முக்கிய பணியை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெற்றிகரமாக முன்னெடுத்து நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.











