ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலைக்காக அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்டுள்ள 73.65 பேர்ச் காணியை சட்டரீதியாக பாடசாலைக்கு வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தவிசாளரும் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் இன்று (24) பாராளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டு வந்து உரையாற்றுகையில் அவர் குறிப்பிட்டதாவது:
“ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை 1912.10.01 அன்று ஆரம்பிக்கப்பட்டு, நூற்றாண்டுக்கும் மேலாக மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வித்துறையில் முக்கிய பங்களிப்பை வழங்கிவரும் புகழ்பெற்ற தேசிய பாடசாலையாகத் திகழ்கிறது.
மாவட்ட, மாகாண மற்றும் அகில இலங்கை மட்டங்களில் கல்வி, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பல சாதனைகளைப் படைத்துள்ள இப்பாடசாலை, ஆயிரக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கியுள்ள ஒரு முக்கியமான கல்வி நிறுவனமாகும். குறிப்பாக, கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையிலான போட்டிகளிலும் இப்பாடசாலை சிறப்பான பெறுபேறுகளைப் பெற்றுள்ளது.
இவ்வாறான வரலாற்றுப் பெருமைமிக்க பாடசாலையின் எதிர்கால வளர்ச்சிக்கும், மாணவர்களின் கல்வி மற்றும் இணைப்பாடவிதான நடவடிக்கைகளுக்கும் போதுமான காணி வசதி மிகவும் அவசியமானதாகும்.
பாடசாலைத் தேவைக்காக 1912, 1921, 1928 மற்றும் 1960 ஆம் ஆண்டுகளில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளின் மூலம் மொத்தமாக 246.45 பேர்ச் காணி சுவீகரிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான அரச வர்த்தமானிகள் மற்றும் நில அளவை ஆவணங்களும் உள்ளன.
இதில் 172.77 பேர்ச் காணி 2016 ஆம் ஆண்டு வழங்கப்பட்டுள்ள போதிலும், பாடசாலைக்காக சுவீகரிக்கப்பட்ட மீதமுள்ள 73.65 பேர்ச் காணி இதுவரை பாடசாலைக்கு வழங்கப்படவில்லை.
அதேவேளை, ஏறாவூர் பொலிஸ் நிலையமும் இப்பிரதேசத்தின் சட்டம், ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் மிக முக்கியமான அரச நிறுவனமாகும். எனவே, பொலிஸ் நிலையத்திற்கும் நிரந்தரமான சட்டபூர்வமான காணி மற்றும் தேவையான கட்டட வசதிகள் வழங்கப்பட வேண்டியது அவசியமானதாகும்.
1925 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட 6006 ஆம் இலக்க நிலவரைபடம் மற்றும் 2016.12.13 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட நில அளவையின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட நிலவரைபடம் ஆகியவற்றிலும் குறித்த காணி அரச காணியாகவும், பாடசாலைத் தேவைக்காக சுவீகரிக்கப்பட்ட காணியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் குறித்த காணியை அடிப்படையாகக் கொண்டு ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் பெயரில் முற்பதிவற்ற உறுதி தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆவணங்களில் காணப்படுகிறது.
மேலும், 2025.02.03 அன்று 73.65 பேர்ச் காணியை அளவிடச் சென்ற நில அளவைத் திணைக்கள அதிகாரிகளின் நடவடிக்கை தடுக்கப்பட்டதாகவும் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே, இந்தப் பிரச்சினை இனியும் காலதாமதப்படுத்தப்படாமல் அவசரமாகத் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். இது பாடசாலைக்கும் பொலிஸ் நிலையத்திற்கும் இடையிலான மோதலாகக் கருதப்படக்கூடாது.
மாறாக, பாடசாலைக்கு அதன் சட்டரீதியாக சுவீகரிக்கப்பட்ட காணி கிடைப்பதையும், பொலிஸ் நிலையத்திற்கு நிரந்தரமான காணி மற்றும் தேவையான கட்டட வசதிகள் கிடைப்பதையும் அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும்.
அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்கள், காணி சுவீகரிப்பு பதிவுகள் மற்றும் நில அளவை ஆவணங்களின் அடிப்படையிலும், இந்த வரலாற்றுப் பெருமைமிக்க தேசிய பாடசாலையின் எதிர்காலத் தேவைகளைக் கருத்திற்கொண்டும், 73.65 பேர்ச் காணியை ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலைக்கு சட்டரீதியாக வழங்குவதற்கு அமைச்சு மூலம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என பாராளுமன்றத்தில் கேட்டுக்கொண்டார்.
இதன்போது, கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பின்வரும் கேள்விகளையும் முன்வைத்தார்:
• பாடசாலைத் தேவைக்காக அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளின் மூலம் மொத்தமாக 246.45 பேர்ச் காணி சுவீகரிக்கப்பட்டுள்ளது என்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்கிறதா?
• ஏற்கனவே அரசாங்கத்தினால் பாடசாலைத் தேவைக்காக சுவீகரிக்கப்பட்ட அரச காணியை அடிப்படையாகக் கொண்டு, ஏறாவூர் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் பெயரில் முற்பதிவற்ற உறுதி தயாரிக்கப்பட்டதற்கான சட்டப்பூர்வ அதிகாரம் என்ன?
• அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ ஆவணங்கள், காணி சுவீகரிப்பு பதிவுகள் மற்றும் நில அளவை ஆவணங்களின் அடிப்படையிலும், பாடசாலையின் எதிர்காலத் தேவைகளைக் கருத்திற்கொண்டும் 73.65 பேர்ச் காணியை பாடசாலைக்கு சட்டரீதியாக வழங்குவதற்கு அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் என்ன?
இதற்கு பதிலளிப்பதற்காக இரண்டு வார கால அவகாசம் வழங்குமாறு இதன்போது கோரப்பட்டது.
-- ஊடகப்பிரிவு
