JobVibe.lk - Sri Lanka Job Portal

காரைதீவு – மாளிகைக்காடு, சாய்ந்தமருது வன்முறையும், EPRLF யின் பழிவாங்கலும்.

8 வது தொடர்..... 

காரைதீவு EPRLF இயக்கத்தின் கோட்டையாகும். அங்கு மருந்துக்கும் LTTE யினர் இல்லை என்பார்கள். EPRLF இயக்கத்தின் ராசீக் குழுவின் தலைவரான “ராசீக்” என்று அழைக்கப்பட்ட முத்துலிங்கம் கணேஷ்குமார் காரைதீவை சேர்ந்தவர்.  

கிழக்கில் தமிழ் – முஸ்லிம் இனங்களுக்கிடையில் ஏற்பட்ட முதலாவது கறுப்புப் புள்ளி இதுவாதும். இந்த மோதலுக்கு முன்பு தமிழ் – முஸ்லிம் சமூகங்களுக்கு இடையில் சிறியளவில் உரசல்கள் இருந்தது. ஆனால் இது மிகப்பெரிய வன்முறையாகும்.   

12, 13, 14 ஏப்ரல் 1985 ஆகிய மூன்று தினங்கள் காரைதீவில் வன்முறைகள் நடைபெற்றன. ஆனால் இது திடீரென நடைபெற்ற ஒன்றல்ல. சில நாட்களாக நடைபெற்றுவந்த உரசல்களின் வெளிப்பாட்டுக்கு பின்பு இறுதியில் வன்முறை வெடித்தது.       

அப்போது அக்கரைப்பற்று, காரைதீவு ஆகிய பிரதேசங்களில் EPRLF இயக்கத்தின் கட்டாய பண வசூல், கொள்ளை, கடத்தல் ஆகிய நடவடிக்கைகள் அதிகரித்திருந்தன. 

இதற்கு எதிராக அக்கரைப்பற்று முஸ்லிம்கள் 1985 ஏப்ரல் 8 தொடக்கம் 12 வரைக்கும் ஹர்த்தால் நடவடிக்கையில் ஈடுபட்டு உலகின் கவனத்தை ஈர்த்தனர். 13 ஏப்ரல் மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன. இந்த ஹர்த்தால் நடவடிக்கையால் இன்னும் பதற்றம் அதிகரித்தது. 

காரைதீவு – மாளிகைக்காடு, சாய்ந்தமருது பதட்டமானது, காரைதீவு வழியாக மாட்டு வண்டிலில் கொண்டுவரப்பட்ட நெல் மூட்டைகள் இடையில் மறிக்கப்பட்டு கொள்ளையிடப்படுவது, பணம் பறிமுதல் செய்யப்படுவது அடிக்கடி நடைபெற்று வந்தநிலையில், மாடு வாங்குவதற்கு காரைதீவுக்கு சென்ற சாய்ந்தமருதை சேர்ந்த இரண்டு நபர்களின் பணம் பறிமுதல் செய்யப்பட்டு, அதில் ரசாக் என்பவர் கத்தியால் குத்தப்பட்டு காயங்களுடன் தப்பி வந்ததாகவும், இன்னுமொருவர் கடத்தப்பட்டார் என்ற செய்தியினாலும் பதட்டம் இன்னும் அதிகரித்தது. 

அத்துடன், காரைதீவு வழியாக சென்ற ஒரு முஸ்லிம் நபரை PLOTE இயக்கத்தினர் கடத்திச் சென்றனர். இதன் விளைவாக பிரதான வீதியல் மக்கள் திரண்டனர். மாளிகைக்காட்டு வழியாக வந்த தமிழர்களை முஸ்லிம்கள் தாக்கினர். இதற்கு பழிவாங்கும் விதமாக காரைதீவு வழியாக சென்ற முஸ்லிம்களை தமிழர்கள் தாக்கினர். பின்பு ஏராளமான மாளிகைக்காடு, சாய்ந்தமருது முஸ்லிம் இளைஞர்கள் காரைதீவுக்குள் நுழைந்து வன்முறைகளில் ஈடுபட்டனர். 

காரைதீவுக்குள் நுழைந்தவர்களில் இரண்டு நபர்களிடம் மாத்திரம் சொட்கண் துப்பாக்கி இருந்ததாகவும், ஏனையவர்களின் கைகளில் கத்தி, அலவாங்கு போன்ற ஆயுதங்கள் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. 

இந்த சம்பவத்தினால், காரைதீவை சேர்ந்த 11 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்ததாகவும் கூறப்படுவதுடன், நூற்றுக்கணக்கான தமிழர்களின் வீடுகள் மற்றும் கடைகள் உடைக்கப்பட்டது.   

காரைதீவின் வடக்கு பகுதி நோக்கி மாளிக்கைகாடு, சாய்ந்தமருது இளைஞர்கள் தாக்குதல் நடத்த ஆரம்பித்ததும், காரைதீவு மக்கள் தெற்கு நோக்கி இடம்பெயர்ந்தனர். அவ்வாறு இடம்பெயர்ந்த மக்களுக்கு நிந்தவூர் முஸ்லிம்கள் உதவி வழங்கியதுடன், அவர்களையும், அவர்களது கால்நடைகளையும் பாதுகாத்ததாக கூறப்படுகின்றது.  

அத்துடன், வன்முறைக்கு பின்னர் சம்மாந்துறை முஸ்லிம்கள் லொரிகளில் உணவு மற்றும் பொருட்களை காரைதீவுக்கு அனுப்பியதாகவும், இதற்கு “முஸ்தாக் அலி” தலைமையில் முன்னின்று செயற்பட்டதாகவும், பின்னாட்களில் முஸ்தாக் அலி என்பவர் தமிழ் ஆயுதக்குழு ஒன்றினால் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. 

இது ஊர் பிரச்சினையா ? சமூக பிரச்சினையா ? 

இந்த வன்முறை மூலமாக ஒரு உண்மையை அறியமுடிகிறது. இது இன வன்முறை என்பதனைவிட, ஊர்களுக்கிடையிலான சண்டை என்று கூறலாம். ஏனெனில் தாக்கிய அதே முஸ்லிம் சமூகத்தவர்கள்தான் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு உதவி புரிந்துள்ளனர். 

இது கிழக்கில் ஏற்கனவே இருந்த தமிழ் – முஸ்லிம் சமூக உறவில் மிகப்பெரிய உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தியது.

பழிவாங்கும் தாக்குதல். 

காரைதீவில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பழிவாங்கும் தாக்குதல் ஒன்றினை EPRLF இயக்கத்தின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. அதாவது 23 April 1985 திகதி மாலை மட்டக்களப்பு மாவட்டத்தின் உன்னிச்சை என்னும் கிராமத்துக்குள் சுமார் 200 பேர் அடங்கிய குழுவினர் ஆயுதங்களுடன் புகுந்து முஸ்லிம் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலினால் பலர் கொல்லப்பட்டு ஏராளமானோர் காயமடைந்தனர். 

இதில் கொல்லப்பட்டவர்கள் பற்றி முரண்பாடான கருத்துக்கள் உள்ளது. சரியான விபரத்தை அறியமுடியவில்லை. ஆனாலும் ஐம்பதுக்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். 

உன்னிச்சை மக்கள் காத்தான்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள முஸ்லிம் கிராமங்களுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்தனர். அதன்பின்பு உன்னிச்சை மக்களின் ஏராளமான விவசாயக் காணிகள் கைவிடப்பட்டதாக கூறப்படுகின்றது.     

தொடரும்.............

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال