JobVibe.lk - Sri Lanka Job Portal

கண்டி மாவட்டத்தில் தொடரும் வெள்ள அபாயம் : நிரந்தரத்தீர்வு காணப்பட வேண்டும் - பாராளுமன்றத்தில் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தல்

கண்டி மாவட்டத்தில் தொடர்ந்து ஏற்பட்டு வரும் வெள்ளப்பெருக்கு அபாயங்களுக்கு உடனடியாக நிரந்தரத்தீர்வுகள் காணப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் பாராளுமன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்றைய (05) அமர்வின்போது உரையாற்றிய அவர், ஆற்றின் நீர்மட்டம் குறைவடைந்த போதிலும், ஆற்றின் கீழ்ப்பகுதியில் வாழும் மக்கள் தொடர்ந்தும் அச்ச நிலையிலேயே வாழ்ந்து வருவதாகத் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

"கொத்மலை அணைக்கட்டு வான் பாயும் மட்டத்தை எட்டியுள்ளது. அணையின் சமீபத்திய அறிக்கைகளும் அதைக்குறிக்கின்றன. இன்றுகூட மதியம் 12 மணிக்குக் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்தன. மதியம் 12 மணி நிலவரப்படி, நீர்த்தேக்க மட்டம் 702 எம்.எஸ்.எல் (MSL) ஆகவும், மொத்தச் சேமிப்பு 168 ஆகவும் இருந்தது. இது மொத்தச் சேமிப்பின் 98.7 சதவீதமாகும்."

"இது வழிந்தோடும் மட்டத்திற்கு மிக அருகில் உள்ளதுடன், வழிவழியாக வெளியேற்றும் விகிதம் 130 கன மீட்டர்களாகவும் உள்ளது. எனவே, கீழ்நிலைப் பகுதிகளில் வெள்ள நீர்மட்டம் குறைவடைந்திருந்தாலும், ஆற்றின் கீழ்ப்பகுதியில் உள்ள மக்கள் இன்னும் பயத்துடனேயே வாழ்ந்து வருகின்றனர்."

"நாவலப்பிட்டி தொகுதியை மட்டும் எடுத்துக்கொண்டால், சேலம் பிரிட்ஜ் பகுதியிலுள்ள அல்-அஸ்ஹர் பாடசாலை பலமுறை வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. 2022ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போதும், இப்பாடசாலைக் கட்டிடங்களை மேற்பகுதிக்கு மாற்றுவது அல்லது வேறிடத்திற்கு மாற்றுவது அல்லது குறைந்தபட்சம் கட்டிடத்தின் தரை தளத்தையாவது உயர்த்திக்கட்டுவது குறித்த அவசியத்தை நான் இந்த சபையில் குறிப்பிட்டிருந்தேன்."

"உயர்ந்த பகுதியில் ஒரு கட்டடம் உள்ளது. ஆனால் அதுவும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. தற்பொழுது ஜயசுந்தர திருமண மண்டபம் மற்றும் அனுருத்த கல்லூரியில் பல மக்கள் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. பிரதேச செயலாளர் இது குறித்து கவனித்து வருகிறார். ஆனால், இது முதல் முறையல்ல."

"கடந்த முறை தித்வா சூறாவளி தாக்கிய போது, கொத்மலை நீர்த்தேக்கமும் அதன் கீழ்ப்பகுதிகளுமான கம்பளை, கெலிஓயா, பேராதனை மற்றும் கடுகஸ்தோட்டை ஆகிய பகுதிகள் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது."

"ஆனால், அந்த நேரத்தில் நாவலப்பிட்டி இவ்வளவு மோசமாகப்பாதிக்கப்படவில்லை. கொத்மலை கீழ்நகரங்கள் உட்பட தற்போது நாவலப்பிட்டி, பலந்தோட்டை மற்றும் பிற பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. 

எனவே, இது மிகத் தீவிரமாக நிகழ்ந்து வருவதால், நாம் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டும்."

"தற்போது ஜயசுந்தர, ஓவிட்ட, மாபகந்த, கொடமுதுன, மேகன் கொலனி, லபுவல்கொட்டுவ ஆகிய பிரதேசங்கள் முற்றிலுமாக வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இத்துயரங்கள் தொடர்ந்து மீண்டும் மீண்டும் ஏற்படுவதோடு, எதிர்வரும் 6, 7 மற்றும் 8 ஆம் திகதிகளில் மற்றொரு சூறாவளி தாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது."

"எனவே, இப்பிரதேசங்களில் இச்சவால்களை எதிர்கொள்வதற்கு சரியான திட்டமிடல் அவசியமாகும். குறிப்பாக, நகரத்திட்டமிடல், முறையான வடிகாலமைப்புகள் மற்றும் ஆற்றுப்படுகைகள் தொடர்பான விடயங்கள் மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்."

"கெலிஓயா நகரம் முழுமையாக பாரிய அழிவுகளுக்கும் துயரங்களுக்கும் ஆபத்தான நிலைக்கும் உள்ளாகி வெள்ளத்தில் மூழ்கியது. ஆற்றங்கரையின் அருகில் எந்தவிதமான தராதரமுமின்றி முறையற்ற கட்டடங்கள் கட்டப்பட்டமையே இதற்கு முக்கிய காரணமாகும். எனவே, இது குறித்து நாம் தீவிரமாகச்சிந்திக்க வேண்டும்."

"உடுநுவர பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதி என்பதால், அதன் தலைவர் உள்ளிட்ட அனைவரும் இவ்விடயத்தில் தீவிர கவனஞ்செலுத்த வேண்டும். கெலிஓயா நகரம் மட்டுமல்லாமல், கம்பளை நகரத்திற்கும் ஒரு முழுமையான வடிகால் திட்டம் வரையப்பட வேண்டும். 

மேலும், சாலிய வெலாவிலுள்ள சாலியபுர, கம்பளை மற்றும் இல்லவத்துர ஆகிய பகுதிகளும் மீண்டும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதனால் பல குடும்பங்கள் வெளியேற்றப்பட்டு, தற்போது மெதுமெதுவாக தங்கள் வீடுகளுக்குத் திரும்பிச்சென்று கொண்டிருக்கின்றனர்."

"கொத்மலை நீர்த்தேக்க நீர் வெளியேற்ற எச்சரிக்கைகள் முன்பு சரியாக வழங்கப்படாததால் பெரும் இழப்புகளும் பாரிய மரணங்களும் ஏற்பட்டன. தற்போது அது குறித்த எச்சரிக்கைகள் முன்கூட்டியே விடுக்கப்படுவது வரவேற்கத்தக்கது."

"இப்போது காவல்துறையினர், பொலிஸ் பதிவாளர் உள்ளிட்ட பாதுகாப்புப் பிரிவைச்சேர்ந்தவர்களும், சம்பந்தப்பட்ட பொறியியலாளர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். வெறும் சாதாரண பணியாளர்களை மட்டும் பொறுப்பேற்க வைத்துவிட்டு உயரதிகாரிகள் தப்ப முடியாது."

"எனவே, இதுபோன்ற பிரச்சினைகள் குறித்து நாம் என்றென்றும் சிந்தித்து, பாராளுமன்றத்தில் பேசி, தகுந்த நிதியைக்கோரி, அதனைச்செயற்படுத்துவதற்கு அவசியமான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.


(விருட்ச வேந்தன்)



Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال