JobVibe.lk - Sri Lanka Job Portal

அல்-குர்ஆனையும், நபிகள் நாயகத்தையும் வாழ்வில் பின்பற்றி விமோசனம் அடைவோம் - மீலாத் தின செய்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம்

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

முஸ்லிம் சமுதாயம் பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு, விமோசனம் அடைவதற்கான வழிவகைகள் அனைத்தும் அல்-குர்ஆனிலும், நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்விலும் காணப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் விடுத்துள்ள மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

மீலாத் தின செய்தியில் அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

உலகளாவிய முஸ்லிம்  சமுதாயம் இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் சொல்லொணாத வேதனைகளுக்கும், சோதனைகளுக்கும் மத்தியில் முன்னோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கின்றது.

நவீன உலகை ஆட்கொண்டிருக்கும் பலதரப்பட்ட பிரச்சினைகளின் தாக்கம் முஸ்லிம்கள் பெரும்பான்மையினராகவும், சிறுபான்மையினராகவும்  வாழும் நாடுகளைப் பொறுத்தவரையில் மிகவும் பாரதூரமானவையாக உள்ளன.

இத்தகைய சூழ்நிலையில்,

இறைவனின் இறுதித்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் தமது 63 ஆண்டுகால உலக வாழ்வில், நபித்துவம் அருளப்பட்டதிலிருந்து 23 வருடங்கள் இஸ்லாமியத் தூதை மக்காவிலும், மதீனாவிலும் நிலைநாட்டிய காலகட்டத்தில் அடையப் பெற்ற அனுபவங்கள் எங்களுக்கு சிறந்த படிப்பினையாக அமைந்துள்ளன.

அன்னாரின் வாழ்வின் விழுமியங்களை முற்றுமுழுதாக பின்பற்றியொழுகி, இம்மை, மறுமை இரண்டிலும் ஈடேற்றம் பெற அன்னாரின் மீலாத் தினத்தில் நாம் உறுதி பூணுவோமாக!

முஸ்லிம்களின் எழுச்சியைச் சகித்துக் கொள்ள முடியாத தீய சக்திகள் இஸ்லாத்தின் மீதான பீதி மனப்பான்மையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.

யுத்த சூழ்நிலையில் பலஸ்தீனம், ஈரான் முதலான பல நாடுகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டு, இனப்படுகொலைகளும்,அவர்கள் மீதான மிலேச்சத்தனமான தாக்குதல்களும் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கும் இந்த வேளையில், நபி பெருமானாரின் வாழ்வில் இருந்து நாம் உயரிய படிப்பினைகளைப் பெற வேண்டியது காலத்தின் தேவையாகும் என்றும் தெரிவித்துள்ளார்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال