(அஸ்லம் எஸ்.மௌலானா)
இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதானத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் அழைப்பின் பேரில் அவர் இங்கு விஜயம் செய்திருந்தார்.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸ்ஸான் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இதன்போது, மைதானத்தின் தற்போதைய நிலைமை மற்றும் அதன் அபிவிருத்தித் தேவைகள் தொடர்பில் அமைச்சர் நேரில் பார்வையிட்டதுடன் அதிகாரிகள் மற்றும் விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார்.
இதன்போது, விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள், இந்த மைதானத்தின் அபிவிருத்தி தொடர்பில் அமைச்சர் சுனில் கமகேவிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.
குறிப்பாக, மைதானத்தில் நிலவும் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, இளைஞர்கள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் போட்டி வாய்ப்புகளை வழங்கக்கூடிய வகையில், மைதானத்தை நவீன தரத்திற்கு அபிவிருத்தி செய்ய வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
இதற்கு சாதகமாகப் பதிலளித்த அமைச்சர் சுனில் கமகே, முதற்கட்டமாக மைதானத்தில் மண் நிரப்பி, புற்தரை அமைத்து, 400 மீற்றர் விளையாட்டு மைதானமாக அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவில் முன்னெடுக்கப்படும் என உறுதியளித்தார்.
நிகழ்வின் இறுதியில் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் கமகே அவர்களை, விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள், நினைவுச் சின்னங்கள் வழங்கியும் பொன்னாடை போர்த்தியும் கெளரவித்தனர்.




