JobVibe.lk - Sri Lanka Job Portal

தமிழ் ஆயுத இயக்கங்களும், முஸ்லிம்களுக்கான தனித்துவ அரசியலும்.

ஆரம்பத்தில் முஸ்லிம்களிடம் அரசியல் விழிப்புணர்வு இருக்கவில்லை. அவர்கள் தனிதுவமிழந்து ஒற்றுமைப்பட முடியாமல் அரசியல் ரீதியில் பலகூறுகளாக பிரிந்திருந்தார்கள். சிங்கள தேசிய கட்சிகள், தமிழ் கட்சிகள், பின்பு தமிழ் ஆயுத இயக்கங்கள் ஆகியவற்றில் உறுப்பினர்களாக இருந்தார்கள். 

அந்தவகையில் இலங்கை தமிழரசு கட்சியில் போட்டியிட்டு கல்முனை தொகுதியில் 1956 இல் எம்.எஸ். காரியப்பரும், பொத்துவில் தொகுதியில் எம்.எம். முஸ்தபாவும், 1960 இல் எம்.சி. அஹமட் கல்முனை தொகுதியிலும், எம்.ஈ.எச். முஹமட் அலி மூதூர் தொகுதியில் 1962, 1965 ஆகிய ஆண்டுகளில் பாராளுமன்றம் சென்றிருந்தனர்.   

1970 காலங்களில் தலைவர் அஷ்ரப் அவர்கள் தந்தை செல்வாவின் அரசியலில் ஈர்க்கப்பட்டு இலங்கை தமிழரசு கட்சியிலும் (ITAK), பின்பு தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (TULF) ஆகியவற்றில் பயணித்ததுடன், 1976 இல் நடைபெற்ற தமிழரசு பிரகடன வட்டுக்கோட்டை மாநாட்டிலும் அஷ்ரப் அவர்கள் கலந்துகொண்டார். 

“அண்ணன் அமிர்தலிங்கம் தமிழ் ஈழத்தை பெற்றுத் தராவிட்டால், நான் பெற்றுத்தருவேன்” என்று 1977 ம் ஆண்டின் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் தலைவர் அஷ்ரபின் பேச்சு பிரபலமாக பேசப்பட்டது. 

அதாவது அன்றைய காலங்களில் தமிழர்களுக்கென்று தனியாக தமிழீழம் அமைவதனை அஸ்ரப் அவர்கள் ஆதரித்திருந்தார் என்பது இதன் மூலம் புரிகின்றது.  

1977 ம் ஆண்டின் பொது தேர்தலில் தமிழர் ஐக்கிய முண்ணியுடன் அஸ்ரப் அவர்கள் MUF என்னும் கூட்டணி அமைத்து சூரியன் சின்னத்தில் கல்முனை, சம்மாந்துறை, மூதூர், புத்தளம் ஆகிய தொகுதிகளில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். 

அன்றைய ஜே.ஆர். ஜெயவர்தனாவின் ஐக்கிய தேசிய கட்சியின் அலையினால் “சூரியன்” சின்னத்தில் போட்டியிட்ட எந்தவொரு முஸ்லிம் வேட்பளர்களினாலும் வெற்றிபெற முடியவில்லை.   

1981 இல் மாவட்ட அபிவிருத்தி சபை (DDC) தேர்தலுக்காக TULF, கிழக்கு மாகாண வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. அதில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற அம்பாறை மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக ஒரு முஸ்லிம் நியமிக்கப்பட வேண்டும் என்று அஸ்ரப் கோரியிருந்தார். ஆனால் அஸ்ரப்பின் கோரிக்கையை TULF ஏற்கவில்லை. 

ஏற்கனவே பல விடயங்களில் முரண்பாடுகள் இருந்த நிலையில், அவைகள் படிப்படியாக அதிகரித்ததுடன், முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதியில் முதன்மை வேட்பாளராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டதானது அரசியல் திருப்புமுனையாக அமைந்தது.

முஸ்லிம்களுக்கு தமிழ் கட்சிகளையும், சிங்கள தேசிய கட்சிகளையும் தவிர்த்து, தனியான பாதையில் செல்வதற்கு தீர்மானித்தார். இந்த தீர்மானத்துக்கு தமிழ் ஆயுதக் குழுக்களின் செயற்பாடுகள் உதவிபுரிந்தன. 

அது பற்றி அடுத்துவருகின்ற பதிவுகளில் அலசி ஆறாய்வோம். 

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال