(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை கடற்படை மரைன் படைப்பிரிவின் 10வது ஆட்சேர்ப்புப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவுசெய்த 03 அதிகாரிகள் மற்றும் 33 கடற்படை வீரர்களுக்குப் பதக்கங்கள் அணிவிக்கும் நிகழ்வு, இலங்கை கடற்படைக் கப்பல் விதூர நிறுவனத்தின் கட்டளை அதிகாரி கெப்டன் ரவிந்து ஹரிச்சந்திரவின் அழைப்பின் பேரில், கடற்படை பிரதி தலைமை அதிகாரியும் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுமான ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே தலைமையில் சனிக்கிழமை (2026 ஆகஸ்ட் 29) திருகோணமலை, சாம்பூரில் அமைந்துள்ள இலங்கை கடற்படைக் கப்பல் விதூர நிறுவனத்தின் பிரதான அணிவகுப்பு மைதானத்தில் நடைபெற்றது.
இதன்படி, எட்டு (08) மாத காலம் இடம்பெற்ற மிகக் கடினமான மரைன் பயிற்சியில் விருப்பார்வத்துடன் இணைந்து கொண்ட 36 கடற்படையினரைக் கொண்ட குழுவுடன் ஆரம்பிக்கப்பட்ட 10 ஆவது ஆட்சேர்ப்புப் பயிற்சிப் பாடநெறியை வெற்றிகரமாக நிறைவுசெய்த 03 அதிகாரிகள் மற்றும் 33 கடற்படை வீரர்களுக்கான மரைன் படைப்பிரிவுப் பதக்கங்கள் அணிவிக்கும் நிகழ்வு, கடற்படை பிரதி தலைமை அதிகாரியும் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியுமான அதிகாரியினாலும் இடம்பெற்றது.
பயிற்சியின் போது சிறப்பான திறமைகளை வெளிப்படுத்திய கடற்படை நபர்களுக்கு பிரதம விருந்தினரால் வெற்றிக்கோப்பைகள் வழங்கப்பட்டன. இதன்போது, பத்தாவது கடற்படை மரைன் படைப்பிரிவுப் பயிற்சியின் மிகச்சிறந்த மரைன் உறுப்பினராகவும், அனைத்துப் பாடங்களிலும் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற உறுப்பினராகவும், திறமையான குறிபார்த்துச் சுடுபவராகவுமான லெப்டினன்ட் வி.பி.ஏ. சசங்க கோப்பைகளை வென்றதுடன், மிகச்சிறந்த உடல் தகுதிக்கான கோப்பையை உடற்பயிற்சிப் பணியாளர் டபிள்யூ.எம்.ஜி.டி.பி. பண்டார பெற்றுக்கொண்டார்.
கோப்பைகள் வழங்கும் நிகழ்வைத் தொடர்ந்து, பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்த கடற்படை வீரர்களை உரையாற்றிய கடற்படை பிரதித் தலைமைத் அதிகாரியும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் புத்திக லியனகேமகே, வெளியேறும் கடற்படை வீரர்களுக்கு முதலில் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், பயிற்சியின் மூலம் பெற்ற அனுபவத்தின் ஊடாக தாய்நாட்டின் இறைமையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாப்பதற்குப் பங்களிப்பு வழங்குமாறும், உத்தியோகபூர்வ வாழ்விலும் தனிப்பட்ட வாழ்விலும் தைரியத்துடனும் உறுதியுடனும் செயற்படுவதற்கு இப் பயிற்சியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறும், தாய்நாட்டுக்கு எதிராக எழும் எத்தகைய சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டுமெனவும், எப்போதும அறிவையும் பயிற்சியையும் புதுப்பித்துக் கொண்டு தொடர்ச்சியான அவதானத்துடன் கடமையாற்ற வேண்டுமெனவும் குறிப்பிட்டார். அத்துடன், பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்குப் பங்களிப்புச் செய்த இலங்கை கடற்படை கப்பல் 'விதுர' நிறுவனத்தின் கட்டளைத் தளபதி உள்ளிட்ட பயிற்சிப் பணியாளர்களுக்கு கடற்படை பிரதித் தலைமை அதிகாரியும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியுமான அவர் தனது நன்றியையும் தெரிவித்தார்.
மேலும், இச்சின்னம் சூட்டும் நிகழ்வு, கடற்படை மரைன் படைப்பிரிவின் திறன்களையும் ஆற்றல்களையும் வெளிப்படுத்தும் கவர்ச்சிகரமான காட்சியினால் வர்ணமளிக்கப்பட்டிருந்ததுடன், இந்நிகழ்விற்காக தளபாடங்கள் மற்றும் சேவைகள் பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் அச்சல சில்வா, கடற்படை காலாட்படைத் தளபதி ரியர் அட்மிரல் குசல் திசாநாயக்க, மரைன் கொமடோர் பணிப்பாளர் சஞ்சீவ கொடிக்கார உள்ளிட்ட கடற்படைத் தலைமையகம் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், தரைப்படை, விமானப்படை மற்றும் காவல்துறையின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் வெளியேறும் கடற்படை வீரர்களின் பெற்றோரும் கலந்துகொண்டிருந்தனர்.










