எம்.யூ.எம்.சனூன்
மாதம்பை அல்-மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தில் ரம்மியமான சூழலில் புதிதாக உணவருந்தும் பகுதி திறப்பு விழா நிகழ்வு திங்கட்கிழமை (27) காலை இடம்பெற்றது.
"உணவே மருந்து, மருந்தே உணவு" என்பதற்கிணங்க உண்ணும் உணவை சுகாதாரமாகவும், மனநிறைவுடனும் உட்கொள்வதற்கு ஏற்ற அமைதியான புதிய சூழலொன்றை உருவாக்கும் புதிய முயற்சியின் பயணத்தில் மாதம்பை அல்-மிஸ்பாஹ் இந்த செயற்திட்டதை ஆரம்பித்துள்ளது.
2006 ம் ஆண்டு க.பொ.த (சா/த) மாணவர்களின் கூட்டு முயற்சியாலும், அர்ப்பணிப்பாலும், ஒத்துழைப்பின் விளைவாலும் பாடசாலையின் அதிபர் எஸ்.எல். அன்வர் தலைமையில் இதன் திறப்பு நிகழ்வு வெகு சிறப்பாகவும், விமர்சையாகவும் நடந்தேறியது.
இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக சிலாபம் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளரான திரு. அசங்க சமிந்த கலந்து சிறப்பித்ததுடன் 2006 (சா/த) பழைய மாணவர் குழுவினர், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக் குழு உறுப்பினர்கள், பழைய மாணவர் சங்க உறுப்பினர்கள், மெஸ்டா மற்றும் இக்ரா குழு உறுப்பினர்கள், ஜனாஸா நலன்புரிச்சங்க உறுப்பினர்கள், நலன் விரும்பிகள், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
கோலாகலமாகத் திறக்கப்பட்ட இந்தப் புதிய உணவருந்தும் கூடமானது ஆரோக்கியமான வாழ்வுக்கும், ஒற்றுமைக்கும் வித்திடும் நல் களமாக விளங்குவதுடன் இந்நிகழ்வுடன் ஒரு பகுதியாக அல்- மிஸ்பாஹ் பாடசாலையின் உதவி அதிபர்களுக்குமான பிரத்தியேக அறையும் உத்தியோகபூர்வமாக சிலாபக் கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளரால் திறந்து வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.












