JobVibe.lk - Sri Lanka Job Portal

நீதித்துறை சுயாதீனத்தில் அரசின் மறைமுகத் தலையீடு : பாராளுமன்றில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூஃப் ஹக்கீம் பகிரங்கக் குற்றச்சாட்டு.

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்தில் காரசாரமான உரை

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கெதிராக எதிர்க்கட்சிகளினால் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இன்று (24) நடைபெற்றது.

இவ்விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூஃப் ஹக்கீம், அரசாங்கத்தின் பொறுப்பற்ற செயற்பாடுகள், நீதித்துறை சுயாதீனத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் மறைமுக நகர்வுகள் மற்றும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் மீதான அவதூறுகள் குறித்துக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அமைச்சரின் மௌனமும் கடமைத்தவறுதலும்

நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிரான இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சிகள் ஆதரிப்பதற்கான பிரதான காரணத்தைப் பாராளுமன்றத்தில் விளக்கிய ரவூஃப் ஹக்கீம் உரையாற்றுகையில்:

"நாட்டில் பாரதூரமான சம்பவமொன்று இடம்பெற்று 24 முதல் 48 மணிநேரம் வரை நீதி அமைச்சர் எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கத்தையும் மக்களுக்கு வழங்காது மௌனம் காத்தார். பாராளுமன்றத்திற்கு வந்து, சமூக ஊடகங்களைப் பார்த்துதான் தாம் தகவல்களை அறிந்ததாகக் கூறுகிறார். மக்கள் உண்மையான தகவல்களுக்காகத் தவித்துக்கொண்டிருந்த வேளையில், பொறுப்புவாய்ந்த அமைச்சர் இவ்வாறு மௌனம் காத்தமை தெளிவான கடமைத் தவறுதலாகும். இந்த ஒரு காரணத்திற்காகவே இவருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கட்சிகளால் நியாயப்படுத்த முடியும்."

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த மறைமுக முயற்சியும் அச்சுறுத்தல்களும்

நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்தை ஒரு சாக்காகப் பயன்படுத்தி, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் தனது மறைமுக நிகழ்ச்சி நிரலை அரசாங்கம் சோதித்துப் பார்க்க முயல்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

வழக்குக் கோப்புகள் தேங்கிக்கிடப்பதை நீக்கவே நீதிபதிகளின் வயதை உயர்த்தப் போவதாக அரசாங்கம் கூறுவது பொய்யான சாட்டுகளாகும் எனக் குறிப்பிட்ட அவர், கொழும்பு மேல் நீதிமன்ற சட்டத்தரணிகள் சங்கம்  வெளியிட்ட அறிக்கையைச் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய அவசரக் கோலத்திலான முடிவுகள், மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கும் உயர் நீதிமன்றத்திற்கும் பதவி உயர்வு பெறக் காத்திருக்கும் இளநிலை நீதிபதிகளின் நியாயமான எதிர்பார்ப்புகளை பறிப்பதாகும் என்றும், தற்போது நீதிபதிகளுக்கு அச்சுறுத்தல்களும் இடமாற்ற வதந்திகளும் பரப்பப்படுவதாகவும் அவர் கவலை வெளியிட்டார்.

தான் நீதி அமைச்சராக இருந்த காலக்கட்டத்தை நினைவூட்டிய அவர்:

"அப்போதும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்த ஒரு குறிப்பிட்ட தரப்பால் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, 'ரவுஃப், அதை இழுக்க வேண்டாம், அது பிரச்சினைக்குரியது' எனக் கூறி, வழக்கறிஞர் தொழிலில் இருந்தவர் என்ற ரீதியில் அந்த முயற்சியைத் தடுத்தார்."

தேவையில்லாத பிரச்சினைகளைத் தலையில் போட்டுக்கொள்ள வேண்டாம் என்றும், 5 ஆண்டுகளுக்குப் பிறகு அமலுக்கு வரும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவந்தால் பரவாயில்லை, ஆனால் இப்போது அவசரக்கோலத்தில் இதைச் செய்வது நீதித்துறைக்குச் செய்யும் துரோகம் என்றும் எச்சரித்தார்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திற்கு ஆதரவு: ஜே.வி.பி இளைஞர்களுக்காக வாதாடிய லியனாரச்சியின் தியாகம் நினைவுகூரல்

பிரதி அமைச்சர் சுனில் வடகலவுடன் இருந்த ஆளுங்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், சஜித் பிரேமதாசவைச் சந்தித்து எதிர்வரும் தேர்தலில் வேட்பாளர் வாய்ப்புக் கேட்டதாகப் பாராளுமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டையும் ஹக்கீம் முற்றாக மறுத்தார்.

"பிரதி அமைச்சர் சுனில் வடகலவுடன் இருந்த அந்த பாராளுமன்ற உறுப்பினர், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் மீது சுமத்திய குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யானது. தைரியமிருந்தால் பாராளுமன்றச் சிறப்புரிமைக்கு பின்னால் ஒளியாமல், அந்த உறுப்பினரோ அல்லது அரசாங்கத்தைச் சேர்ந்த யாராவது ஒருவரோ வெளியே வந்து இந்தக் குற்றச்சாட்டைக் கூறட்டும். அப்போது அவர் சட்டப்படி நஷ்டஈடு கேட்டு வழக்குத் தொடருவார்."


வரலாற்றுக்காலம் தொட்டே நீதித்துறை சுதந்திரத்திற்காகவும் சட்டத்தரணிகளின் உரிமைகளுக்காகவும் குரல்கொடுத்த இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் வரலாற்றை அரசாங்கம் மறந்து செயற்படக் கூடாது என வலியுறுத்திய அவர், ஜே.வி.பி (JVP) இளைஞர்களுக்காக வாதாடிய சட்டத்தரணி லியனாரச்சியின் தியாகத்தையும் நினைவுகூர்ந்தார்:

"ஜே.வி.பி அமைப்பைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கைது செய்யப்பட்டு, கடுமையான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்ட காலத்தில், அவர்களுக்காக முன்வந்து தைரியமாக வாதாடியவர் சட்டத்தரணி லியனாரச்சி ஆவார். அதற்காக அவர் கைது செய்யப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டுப் படுகொலையும் செய்யப்பட்டார். அவரது படுகொலையைக் கண்டித்து நாடு முழுவதும் நீதிமன்றங்களைப் புறக்கணித்துப் போராட்டம் நடத்திய வரலாற்றுப் பின்னணி கொண்டதே இலங்கை சட்டத்தரணிகள் சங்கமாகும்."

ஓய்வுபெறும் தலைமை நீதிபதிகளுக்குப் பரிசளிக்கும் தவறான நடைமுறை

ஓய்வுபெறும் தலைமை நீதிபதிகளுக்கு நியூயோர்க்கிற்கான (ஐ.நா) நிரந்தரப் பிரதிநிதி போன்ற உயர்பதவிகளை வழங்கிப் பரிசளிக்கும் தவறான நடைமுறையைத் தற்போதைய அரசாங்கமும், ஜனாதிபதியும் தொடர்வதாக அவர் குற்றம் சாட்டினார்.

முன்னர் மோகன் பீரிஸ் நியமிக்கப்பட்டதையும் சுட்டிக்காட்டிய அவர், நீதித்துறையின் சுயாதீனத்தையும் கண்ணியத்தையும் பாதுகாக்கும் பொருட்டு, ஓய்வுக்குப் பிந்தைய இத்தகைய நியமனங்களைக் கட்டுப்படுத்த அனைத்துப் பாராளுமன்றக் கட்சித் தலைவர்களும் ஒன்றிணைந்து ஒரு பொதுவான உடன்பாட்டிற்கு வர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துத் தனதுரையை நிறைவு செய்தார்.


(தொகுப்பு : நிசப்தம்)




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال