சுங்க திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புனித அல் குர்ஆன் பிரதிகளை விடுவிப்பதற்கு மீளாய்வு குழுவின் உத்தியோகபூர்வமான அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. அதனால் தொடர்ந்தும் தாமதிக்காமல் அல்குர்ஆன் பிரதிகளை விடுவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (07) இடம்பெற்ற தொல்பொருளியல் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் மீீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
புனித அல்குர்ஆன் என்பது முஸ்லிம்களுக்கு சாதாரண ஒரு நூல் கிடையாது. அது எங்களின் வாழ்வியல் வழிகாட்டி, ஆன்மீக அடையாளம் மற்றும் அன்றாட வாழ்வின் அங்கமாகும். இந்நிலையில், புனித அல்குர்ஆன் பிரதிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுங்கத்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருப்பது, எங்களின் மதச் சுதந்திரம் மற்றும் ஆன்மீக உரிமை தொடர்பில் கடும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பில் பல முறை இவ் உயரிய சபையில் நாம் உரையாற்றியதோடு எங்கால் முடிந்த பல முயற்சிகளை மேற்கொண்டுவருகிறோம்.
இதுவரை, மீளாய்வுக் குழுவின் அனுமதி கிடைத்தவுடன் விடுவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த மீளாய்வுக் குழுவும் உத்தியோகபூர்வ அனுமதியை வழங்கியுள்ளது. எனவே, இனியும் நிர்வாக அல்லது சுங்க நடைமுறைகளை காரணம் காட்டி இந்த குர்ஆன் பிரதிகளை தடுத்து வைப்பதற்கு எந்த நியாயமும் இல்லை.
ஆகவே, பொறுப்புக்கூற வேண்டிய அமைச்சு உடனடியாக தலையிட்டு, இந்த தாமதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, புனித அல்குர்ஆன் பிரதிகளை விரைவாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அல்குர்ஆன் பிரதிகளுக்கு மீளாய்வுக் குழு தற்போது உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கியுள்ள நிலையில், முஸ்லிம் கலாசார திணைக்களம் குறித்த கடிதத்தை அடிப்படையாக கொண்டு பாதுகாப்பு அமைச்சு மற்றும் புத்த சாசன அமைச்சுக்கு குர்ஆன் பிரதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜனாதிபதியுடன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் இதுதொடர்பில் சந்தித்து கலந்துரையாடிய போதும் மீளாய்வு குழுவின் அனுமதி கிடைக்காமல் இருப்பதாலே குர்ஆன் பிரதிகளை விடுவிக்க முடியாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது மீளாய்வு குழுவின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதால், குர்ஆன் பிரதிகளை விடுவிக்க தேவையான நடவடிக்கைகளை அமைச்சர் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
