(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
'க்ளீன் ஸ்ரீ லங்கா' செயலகம், தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு மற்றும் இலங்கை பொலிஸ் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பிரிவு ஆகியன இணைந்து செயல்படுத்தும் "டெங்கு நோயற்ற கொழும்பை நோக்கி" என்ற தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்திற்கு இணையாக, சிறப்புச் சுத்திகரிப்புத் திட்டமொன்று செவ்வாய்க்கிழமை (2026 ஜூலை 07) மொறட்டுவை பல்கலைக்கழக வளாகத்தில் இலங்கை கடற்படையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
2026 ஜூலை மாதம் 05 ஆம் திகதி முதல் 12 ஆம் திகதி வரை மிழு நாடு முழுவதும் உள்ளடக்கிய ரீதியில் செயல்படுத்தப்படும் இந்த தேசிய திட்டத்திற்கு தீவிரமாகப் பங்களிப்பு வழங்கி, 59 கடற்படை வீரர்கள், பொது சுகாதாரப் பரிசோதகர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகத்தின் ஆதரவுடன் இந்த டெங்கு ஒழிப்புத் திட்டத்தை மேற்கொண்டனர்.
இதன்போது, மாணவர் விடுதிகள், நிர்வாகக் கட்டடங்கள், விளையாட்டு மைதானங்களைச் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் அதனைச் சூழவுள்ள நீர் தேங்கி நிற்கும் இடங்கள் உட்பட ஒட்டுமொத்த பல்கலைக்கழக வளாகத்தையும் உள்ளடக்கும் வகையில், டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. அத்துடன், தேவையற்ற நீர் தேங்கும் தாங்கிகளை அகற்றுதல் மற்றும் கழிவுகளை அகற்றுதல் உள்ளிட்ட பல பணிகள் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.












