பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தனிநபர் பிரேரணை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் "இலங்கை பைத்துல்மால் நிதியம்" என்ற பெயரில் புதிய நிதியமொன்றை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியே இப்பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களின் கல்வி, கலாசாரம், தொழில் வாய்ப்புகள், சமூகப் பொருளாதார முன்னேற்றம், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் அன்றாட வாழ்வாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கென அர்ப்பணிக்கப்பட்ட தனித்துவமான நிதியமொன்று தற்போது முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் இல்லாதிருப்பதை இப்பிரேரணை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், இத்தகைய சமூக மற்றும் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், உலகின் பல முஸ்லிம் நாடுகளிலும், முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் பல்வேறு நாடுகளிலும் "பைத்துல்மால்" நிதியங்கள் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி வருவதாகவும், அவை சமூக நலனில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி வருவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தனது பிரேரணையில் எடுத்துரைத்துள்ளார்.
இலங்கையிலும் இவ்வாறான உத்தியோகபூர்வ நிதியமொன்று நிறுவப்பட்டால், அதற்குத் தேவையான நிதி ஆதாரங்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் வாழும் தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் நன்கொடையாளர்களிடமிருந்து எளிதில் திரட்ட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, மேற்கண்ட நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு, முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் கீழ் "இலங்கை பைத்துல்மால் நிதியம்" என்ற பெயரில் புதிய நிதியமொன்றை நிறுவுவதற்கான உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என அவரின் தனிநபர் பிரேரணையில் விரிவாகக் கோரப்பட்டுள்ளது.
-- ஊடகப்பிரிவு
