எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் பாத்திமா பாலிகா மகா வித்தியாலயத்தில், புத்தளம் மாநாகர முதல்வர் பொறியியலாளர் ரின்ஷாத் அஹ்மதின் தொடர் முயற்சியினால் தற்போதைய அரசாங்கத்தின் 29 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் பெறப்பட்ட 90 x 25 அளவிலான கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சனிக்கிழமை (04) காலை கல்லூரி அதிபர் திருமதி ஏ.எல்.ஸரீனா பர்வீன் தலைமையில் இடம்பெற்றது.
64 வருட வரலாற்றைக் கொண்ட புத்தளம் பாத்திமா பாலிகா மகா வித்தியாலயம் கல்வி, இணைப்பாட விதான செயற்பாடுகளில் பல சாதனைகளை நிகழ்த்தி வரும் வேளை பௌதீக ரீதியாக பின் தங்கிய நிலையில் காணப்பட்டு வருகின்றது.
மிகவும் அத்தியாவசிய தேவையான வகுப்பைறை கட்டடம் சுமார் 25 ஆண்டுகளாக அவ்வப்போதைய அரசியல் பிரமுகர்கள் முயற்சி செய்தும் கைக்கூடாமல் போனது.
இந்நிலையிலையே இந்த அரசாங்கத்தினால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த புதிய கட்டடத்துக்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அரச நிருவாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன கலந்து சிறப்பித்தார்.
மேலும் புத்தளம் மாவட்ட ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களான கயான் ஜானக, எம்.ஜே.எம்.பைசல் மற்றும் புத்தளம் மாநகர முதல்வர் ரின்ஷாத் அஹ்மத் உட்பட மாநகர சபை உறுப்பினர்களுடன், புத்தளம் வடக்கு கோட்ட பணிப்பாளர் திருமதி ஏ. நஸ்லியா பேகம், கற்பிட்டி கோட்ட பணிப்பாளர் ஏ.எம்.ஜவாத் , பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு செயலாளர் டாக்டர் நைஜீல் மற்றும் உறுப்பினர்கள், பழைய மாணவ சங்க செயலாளர் திருமதி இனூஷா மற்றும் உறுப்பினர்கள், புத்தளம் பெரிய பள்ளி தலைவர் ஏ.டீ.எம்.நிஜாம், ஓய்வு நிலை அதிபர் திருமதி பிந்தாரி சாபார், விஞ்ஞான கல்லூரி அதிபர் ஐ.எல்.சிராஜுதீன், முன்னாள் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பாடசாலையின் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், பகுதித்தலைவர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள், மாணவர்கள், ஊடகவியலாளர்கள், நலன் விரும்பிகள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.






