JobVibe.lk - Sri Lanka Job Portal

The Real Gentleman on the Floor: எதிர்ப்புக்கு அப்பாற்பட்ட MLAM ஹிஸ்புல்லாஹ்வின் 'Clean & Mature' அரசியல்..! ஆளும்தரப்பு அரசியல் தலைவர்களும் ஹிஸ்புல்லாஹ்வை பாராட்டுவதற்கான காரணம் என்ன?

✍️ எஸ். சினீஸ் கான்

ஜனநாயக ஆட்சிமுறையில் அரசாங்கம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு பொறுப்புணர்வும் ஆக்கப்பூர்வமான அணுகுமுறையும் கொண்ட எதிர்க்கட்சியும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அரசாங்கத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டி திருத்தப் பாதைக்கு வழிநடத்துவதும், மக்கள் நலன் சார்ந்த நல்ல திட்டங்களுக்கு ஆதரவளிப்பதும் ஒரு ஆரோக்கியமான எதிர்க்கட்சியின் அடிப்படைப்பொறுப்பாகும்.

இந்த அரசியல் நாகரிகத்தையும் ஜனநாயகப் பண்பாட்டையும் தனது செயற்பாடுகள் மூலம் வெளிப்படுத்தி வருபவர்களில் குறிப்பிடத்தக்கவர் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கிழக்கு மாகாணத்தின் சிரேஷ்ட அரசியல் தலைவர்களில் ஒருவருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்.

எதிர்க்கட்சி அரசியல் என்பது வெறுமனே அரசாங்கத்தை எதிர்ப்பது அல்ல என்பதை அவர் மீண்டும் மீண்டும் தனது அரசியல் நடைமுறையின் மூலம் வெளிப்படுத்தி வருகிறார். நாடாளுமன்றத்தில் குரல் உயர்த்துவது மட்டுமே எதிர்க்கட்சியின் பணி அல்லாது மாற்றுக் கருத்துகளை முன்வைப்பதும், ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்பதும், மக்கள் நலனுக்குப் பாதகமான கொள்கைகளைச் சுட்டிக்காட்டுவதும் அதன் உண்மையான பொறுப்பாகும்.

அந்த வகையில், அரசாங்கம் கொண்டு வரும் சட்டமூலங்கள் மற்றும் கொள்கைகளை ஆராய்ந்து, அவற்றின் பலவீனங்களையும் குறைபாடுகளையும் சுட்டிக்காட்டுவதோடு, தேவையான திருத்தங்களையும் முன்மொழியும் அரசியல்வாதியாக ஹிஸ்புல்லாஹ் திகழ்கிறார். அதேநேரம், மக்கள் நலனுக்குப் பயனளிக்கும் திட்டங்கள் முன்வைக்கப்படும் போது அவற்றை வெறுமனே அரசியல் காரணங்களுக்காக எதிர்க்காமல், திறந்த மனதுடன் வரவேற்று ஆதரிப்பதிலும் அவர் பின்வாங்குவதில்லை.

குறிப்பாக நாட்டின் பொருளாதார மீட்பு, சமூக நல்லிணக்கம், போதைப்பொருள் ஒழிப்பு, கல்வி, உட்கட்டமைப்பு அபிவிருத்தி மற்றும் மக்களின் வாழ்வாதார முன்னேற்றம் போன்ற விடயங்களில் அரசாங்கம் முன்னெடுக்கும் சாதகமான முயற்சிகளை அவர் வெளிப்படையாக வரவேற்கும் முதிர்ச்சியான அரசியல் அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறார். அரசியல் என்பது எதிர்ப்புக்காக எதிர்ப்பது அல்லாது மக்களின் நலனே அதன் இறுதி இலக்கு என்பதையே அவரது செயற்பாடுகள் வெளிப்படுத்துகின்றன.

அதேவேளை, சிறுபான்மை மக்களின் உரிமைகள், கல்வி வாய்ப்புகள், சுகாதார வசதிகள், காணிப் பிரச்சினைகள், மீனவர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் வாழ்வாதார சவால்கள் போன்ற விடயங்களில் அவர் தொடர்ந்து உறுதியான குரலாக இருந்து வருகிறார். நாடாளுமன்றத்தில் அவர் முன்வைக்கும் கருத்துக்கள் வெறும் உணர்ச்சிவசப்பட்ட அரசியல் உரைகளாக இல்லாமல், தரவுகள், நடைமுறை உண்மைகள் மற்றும் மக்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்டவையாக அமைந்துள்ளன.

தனது மாவட்ட மக்களின் நீண்டகால தேவைகள் மற்றும் அபிவிருத்தி எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக ஆளும் தரப்பின் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணி, தேவையான வளங்களையும் திட்டங்களையும் பெற்றுத்தர அவர் மேற்கொள்ளும் முயற்சிகள் பல தரப்பினராலும் பாராட்டப்படுகின்றன.

குறிப்பாக, எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோதிலும், ஆளும் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியல் தலைவர்களும் அவரை மரியாதையுடனும் மதிப்புடனும் அணுகுவது அரசியல் வட்டாரங்களில் கவனிக்கத்தக்க விடயமாகக் கருதப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், தனிப்பட்ட தாக்குதல்கள் அல்லது தேவையற்ற அரசியல் மோதல்களைத் தவிர்த்து, விடயங்களை உண்மைத் தரவுகளின் அடிப்படையில் விவாதிப்பதும், தேசிய நலனும் மக்கள் நலனும் சார்ந்த விடயங்களில் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு ஒத்துழைக்கும் பண்புமாகும். அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவரது கண்ணியமான நாடாளுமன்ற நடத்தை மற்றும் முதிர்ச்சியான அணுகுமுறை பல தரப்பினரின் மரியாதையைப் பெற்றுள்ளதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.

அரசியல் பதவிகளும் கூட்டணிகளும் காலத்துக்கு ஏற்ப மாறலாம். ஆனால் மக்கள் மீதான அர்ப்பணிப்பும் சேவை மனப்பான்மையும் மாறக்கூடாது என்பதற்கு ஹிஸ்புல்லாஹ்வின் தற்போதைய அரசியல் பயணம் ஒரு எடுத்துக்காட்டாக அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர். மக்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதே அரசியலின் நோக்கமாக இருக்க வேண்டும் என்ற அவரது நிலைப்பாடு, நடைமுறை அரசியலின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துகிறது.

நாடாளுமன்ற ஜனநாயக மரபுகளை மதித்து, தேவையான இடத்தில் ஆதரவும் அவசியமான இடத்தில் விமர்சனமும் முன்வைத்து, அரசியலை கண்ணியத்துடனும் பொறுப்புடனும் முன்னெடுத்துச் செல்லும் அவரது அணுகுமுறையே அவரை பலரது பார்வையில் ஒரு "Real Gentleman on the Floor" என அடையாளப்படுத்துகிறது.

இன்றைய அரசியல் சூழலில் அரிதாகக் காணப்படும் "Clean & Mature Politics" என்ற அணுகுமுறை, அரசியல் என்பது பகைமை அல்ல, பொறுப்பு என்பதையும்; எதிர்க்கட்சி என்பது தடையாக அல்ல, ஆக்கப்பூர்வமான மாற்றத்திற்கான ஜனநாயகத் தூணாக இருக்க வேண்டும் என்பதையும் நினைவூட்டுகிறது. மக்கள் நலனை மையமாகக் கொண்ட இத்தகைய அரசியல் பண்பாடு வலுப்பெறுவது, நாட்டின் ஜனநாயக வளர்ச்சிக்கும் எதிர்கால அரசியல் தலைமுறைக்கும் நல்ல முன்னுதாரணமாக அமையும்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال