இம்முறை க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய அனைத்து மாணவச் செல்வங்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தற்போது வெளியாகியுள்ள பரீட்சை பெறுபேறுகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று தமது திறமையையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்திய மாணவர்களுக்கு எனது உளப்பூர்வமான பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வெற்றியை ஒரு வலுவான அடித்தளமாகக் கொண்டு, உயர்கல்வி மற்றும் எதிர்கால இலக்குகளை நோக்கி மேலும் உறுதியுடனும் விடாமுயற்சியுடனும் முன்னேறி, சமூகத்திற்கும் நாட்டிற்கும் பயனுள்ள ஆளுமைகளாக உருவாக வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
அதேவேளை, தாம் எதிர்பார்த்த பெறுபேறுகளைப் பெற முடியாமல் போன மாணவர்கள் எவரும் மனம் தளர வேண்டாம். ஒரு பரீட்சையின் பெறுபேறு மட்டுமே ஒருவரின் எதிர்காலத்தையோ திறமையையோ தீர்மானிப்பதில்லை. வாழ்க்கையில் பல சாதனையாளர்கள் ஆரம்பத்தில் பல்வேறு சவால்களையும் தோல்விகளையும் சந்தித்தே வெற்றியின் உச்சத்தை அடைந்துள்ளனர். எனவே, தன்னம்பிக்கையை இழக்காமல், புதிய உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் உங்கள் அடுத்தகட்ட கல்விப் பயணத்தைத் தொடருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கல்வி என்பது தனிமனித முன்னேற்றத்திற்கான கருவி மட்டுமல்லாது அது ஒரு சமூகத்தின் நிலையான வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் அடிப்படையாகும். அறிவும் ஒழுக்கமும் திறமையும் கொண்ட இளம் தலைமுறையினரே நாளைய நாட்டின் தலைவர்கள் என்பதை மனதில் கொண்டு, தொடர்ந்தும் கற்றலிலும் ஆளுமை வளர்ச்சியிலும் கவனம் செலுத்துங்கள்.
இந்த வெற்றிப் பயணத்தில் மாணவர்களுக்குப் பின்னால் உறுதுணையாக நின்ற பெற்றோர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
எல்லாம் வல்ல அல்லாஹ் அனைத்து மாணவர்களுக்கும் அறிவிலும் ஆற்றலிலும் சிறந்து விளங்க அருள்புரிவானாக!
--கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்
(பாராளுமன்ற உறுப்பினர்)
