JobVibe.lk - Sri Lanka Job Portal

நாம் வழங்குவது வெறும் தித்வா உதவி மட்டுமல்ல, நாட்டின் முழுப் பொருளாதாரத்தையும் உயர்த்துவதற்கான ஒரு செயல்முறையாகும். அமைச்சர் சந்தன அபேரத்ன உரை.

எம்.யூ.எம்.சனூன்

"நாம் வழங்குவது வெறும் தித்வா உதவி மட்டுமல்ல, நாட்டின் முழுப் பொருளாதாரத்தையும் உயர்த்துவதற்கான ஒரு செயல்முறையாகும்" என பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.


'தித்வா' புயலால் பாதிக்கப்பட்ட பள்ளம பிரதேச செயலகப் பிரிவு மக்களுக்கு நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்குவதற்காக சமீபத்தில் குறித்த செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.


இந்த பிரதேச செயலக பிரிவில், 1,214 குடும்பங்களைச் சேர்ந்த 6,909 பேர் பேரிடரால் பாதிக்கப்பட்டனர். மற்றும் 335 வீடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்தன. 9 தங்குமிடங்களில் 2,029 பேருக்கு வீடுகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பேரிடருக்குப் பிறகு, மக்களின் வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான ஒரு அடிப்படை நடவடிக்கையாக அரசாங்கம் உடனடியாக நிவாரணம் வழங்கியது. மேலும், வீடுகளைச் சுத்தம் செய்வதற்காக 163 குடும்பங்களுக்கு தலா ரூ. 25,000 வும், சமையலறை உபகரணங்களுக்காக 86 குடும்பங்களுக்கு தலா ரூ. 100000 வும் வழங்கியது. 551 பாடசாலை பிள்ளைகளுக்கு தலா ரூ. 15,000 வும், மற்ற 51 குழந்தைகளுக்கு தலா ரூ. 100,000 வும் வழங்கப்பட்டுள்ளது.


இந்நிகழ்வில் தொடர்ந்து பேசிய அமைச்சர், 


வீடுகள் கட்டப்படும்போது செங்கல், மணல், சிமெண்ட் மற்றும் இரும்பு போன்ற பொருட்களுக்கான தேவை அதிகரிப்பதாகவும், கொத்தனார்கள் மற்றும் தச்சர்கள் உள்ளிட்ட பல துறைகளுக்கு வேலைப் பாதுகாப்பும் வருமான ஆதாரங்களும் உருவாக்கப்படுவதாகவும் கூறினார். 


மேலும், பொது வரிப் பணம் இந்த வழியில் வழங்கப்படுவதால், பயனாளிகள் அதைத் தவறாகப் பயன்படுத்தாமல் வீடு கட்டும் நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவது அவர்களின் பொறுப்பாகும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.


மாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், கிராம அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள், தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையைத் தியாகம் செய்து மக்களுக்காகக் காட்டிய அர்ப்பணிப்பை அமைச்சர் சிறப்பாகப் பாராட்டினார். 


மேலும், "வளமான நாடு - அழகான வாழ்க்கை" என்ற தேசிய இலக்கை அடைய, எந்த அரசியல் அல்லது மத வேறுபாடுகளும் இன்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அமைச்சர் இதன்போது அறைகூவல் விடுத்தார்.


முற்றிலும் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. சேதமடைந்த வீடு ஒரு குடிசையாக இருந்தாலும் சரி அல்லது தற்காலிக வீடாக இருந்தாலும் சரி, இந்த முழுத் தொகையும் ஒரு புதிய நிரந்தர வீட்டைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்படும். 


குறைந்த பட்சம் பகுதியளவு சேதமடைந்த வீடுகளுக்கு எந்தவித மதிப்பீடும் இன்றி 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும் சேதத்தின் தன்மையைப் பொறுத்து இத்தொகை 25 லட்சம் ரூபாய் வரை அதிகரிக்கலாம். 


இந்நிகழ்வில், பயனாளிகளுக்கு ஆரம்பத் தவணையாக 2 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளும் வழங்கப்பட்டன.


புத்தளம் மாவட்டச் செயலாளர் வை.ஐ.எம். எம். சில்வா, ஆனமடு பிரதேச சபைத் தலைவர் ஆலோக பண்டாரா மற்றும் துணைத் தலைவர் தில்ஷான் இமல்கா, அமைச்சரின் மாவட்ட ஒருங்கிணைப்புச் செயலாளர்களான ஆர்.பி.டி. மஞ்சுள மற்றும் கீர்த்தி பம்பர பெட்ட, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பெருமளவிலான அரச அதிகாரிகள், பயனாளிகள், அப்பகுதி மக்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.












Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال