Breaking News

தமிழக அமைச்சர் ஆடுதுறை ஏ.எம். ஷாஜஹானுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வாழ்த்து

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ள சிறுபான்மை நலத்துறை அமைச்சர் பதவியை சிறப்பாகக் கையாள்வீர்கள் என்ற நம்பிக்கை நிறையவே இருக்கிறது


தமிழக அமைச்சர் ஆடுதுறை ஏ.எம். ஷாஜஹானுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் வாழ்த்து


"தமிழக அரசில் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சிறுபான்மை நலத்துறை  அமைச்சை சிறப்பாகக் கையாள்வீர்கள் என்று நம்பிக்கை நிறையவே

உண்டு" என விரிவாக்கப்பட்ட தமிழக அமைச்சரவையில் வெள்ளிக்கிழமை (22) ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் முன்னிலையில் பதவிப்  பிரமாணம் செய்து பொறுப்பேற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்  மாண்புமிகு ஏ.எம். ஷாஜஹானுக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரவூப்  ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


ஆடுதுறை ஷாஜஹான் அமைச்சராக நியமனம் பெற்ற உடன் அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்த  முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஹக்கீம் அவருக்கு வாழ்த்துக் கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார்.


அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:


இந்திய அரசியலில் மிக நீண்ட கால  வரலாற்றைக் கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஊடாக முதல் முதலாக பாபநாசம் தொகுதியில் போட்டியிட்டு, சட்டமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்டவுடன் தாங்கள் பொறுப்பு  வாய்ந்த அமைச்சராகவும், தமிழக முதலமைச்சர் ச.ஜோசப்  விஜய், தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களிடம் வேண்டிக் கொண்டதற்கு இணங்க, கட்சியின் அரசியல் ஆலோசனைக் குழுவின் அங்கீகாரத்துடன் நியமிக்கப்பட்டிருப்பதையிட்டு இலங்கையில் நேசக்  கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தங்களை வாழ்த்தி வரவேற்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறோம்.


அத்துடன் தமிழக அரசின்  'தகைசால் தமிழர் "விருது பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களுக்கான பாராட்டு விழா மற்றும் இசைமுரசு நாகூர் ஈ.எம்.ஹனிபா நூற்றாண்டு நிகழ்வு ஆகியவற்றை நாங்கள் கொழும்பில் சென்ற வருடம் விமரிசையாகக் கொண்டாடிய போது தாங்களும் அதில் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தீர்கள்.


தமிழகத்துக்கு நான் வருகின்ற போதெல்லாம்  கூடவே இருந்து, என்னோடு பயணித்து, உறுதுணையாக இருந்துவரும் தங்களுடன் நான் ஒரு நெருங்கிய நண்பராகவே பழகி வருகிறேன்.


தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பொறுப்பு வாய்ந்த  பதவியோடு இணைந்ததாக வக்பு வாரியம் மற்றும் ஹஜ் யாத்திரை ஆகியனவும் உள்வாங்கப்படுவதாகவும் அறிகிறேன். அமைச்சுப் பொறுப்புகளை திறமையாக வகித்து, சிறுபான்மை மக்களின் நலனில் கண்ணும், கருத்துமாக இருந்து, தமிழகத்தில் மதவாத சக்திகள் தலை தூக்குவதற்கு இடமளித்து விடாமல் செயலாற்றி, நீங்கள் புதிய அரசுக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்க எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக! எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.







No comments