Breaking News

புத்தளம் பெரிய பள்ளிக்கு உட்பட்ட 84 வாடகைக் கடைகள் மற்றும் இரண்டு வீடுகளுக்கான புதிய ஒப்பந்தங்கள் ஜம்இய்யத்துல் உலமாவிடம் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளன.

எம்.யூ.எம்.சனூன்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில், புத்தளம் பெரிய பள்ளிக்கு உட்பட்ட 84 வாடகைக் கடைகள் மற்றும் இரண்டு வீடுகளுக்கான புதிய ஒப்பந்தங்கள் (Agreement), இஸ்லாமிய கலாசார திணைக்களம் மற்றும் வக்ப் சபையின் அனுமதி, வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ் ஜம்இய்யத்துல் உலமாவிடம் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளன.


புத்தளம் பெரியபள்ளிக்கு சொந்தமான வாடகைச் சொத்துகள் அனைத்தும் ஒழுங்கு முறையுடனும், சட்ட ரீதியான பாதுகாப்புடனும் நிர்வகிக்கப்பட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தின் அடிப்படையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 


குறிப்பாக, பள்ளிவாசலின் வருமான மூலங்களை பாதுகாத்து, அதன் எதிர்கால நிர்வாக மற்றும் சமூகப் பணிகள் நிலைத்தன்மையுடன் தொடர வேண்டும் என்பதற்காக புதிய ஒப்பந்தங்கள் புதுப்பிக்கப்பட உள்ளன.


இதனடிப்படையில், புத்தளம் பெரிய பள்ளிக்கு உட்பட்ட சுமார் 84 வாடகைக் கடைகள் மற்றும் இரண்டு வீடுகளுக்கான ஒப்பந்த ஆவணங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, உரிய நடைமுறைகளுக்கு அமைவாக தயாரிக்கப்பட்டுள்ளன. 


இந்த ஒப்பந்தங்கள் மூலம் வாடகை நிர்வாகம் ஒழுங்குபடுத்தப்படுவதுடன், பள்ளியின் சொத்துகள் பாதுகாப்பாக பராமரிக்கப்படுவதற்கான நிர்வாக கட்டமைப்பும் வலுப்படுத்தப்படுகின்றது.


இந்த ஒப்பந்தங்கள், புத்தளம் பெரிய பள்ளி வாடகைக் கடை உரிமையாளர்களின் நிர்வாகக் குழுத் தலைவர் சகோதரர் ஜாகிர் அவர்களிடம், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் மிஸ்பாஹியினால் ஜம்இய்யாவின் காரியாலயத்தில் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன.


மேலும், பள்ளிவாசல் நிர்வாகம் தொடர்பான ஆவணப்பணிகள், சொத்து பராமரிப்பு நடவடிக்கைகள் மற்றும் சமூக நலன் சார்ந்த செயற்பாடுகள் அனைத்தும் பொறுப்புணர்வுடனும் திட்டமிட்ட முறையிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.


இந்த முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கிய புத்தளம் பெரிய பள்ளி நிர்வாக உறுப்பினர்களுக்கும், பெரிய பள்ளி வாடகை கடை உரிமையாளர்களுக்கும் ஜம்இய்யத்துல் உலமா தலைவர் நன்றி தெரிவித்துள்ளார்.





No comments