Breaking News

மூத்த ஊடகவியலாளர் ஏ.எல்.எம். சலீம் அவர்களின் மறைவிற்கு மீடியா போரம் அனுதாபம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

மூத்த ஊடகவியலாளரும், நிந்தவூரைச் சேர்ந்த கலை, இலக்கிய ஆளுமையுமான கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீம் அவர்களின் மறைவிற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது.


கடந்த ஜந்து  தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை ஊடகத்துறையில், குறிப்பாக தமிழ்  ஊடகப் பரப்பில் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் பதித்தவர் ஏ.எல்.எம். சலீம். 1966ஆம் ஆண்டு காலப் பகுதியில் ஊடகத்துறையில் காலடி பதித்த அன்னார், இளம் தலைமுறையினரை இனங்கண்டு ஊடகவியலாளர்களாகவும் கலைஞர்களாகவும் வளர்த்தெடுத்து ஊக்குவித்த பெருமைக்குரியவராவார்.


தமிழ் தேசிய இதழ்களான வீரகேசரி,   சுதந்திரன், தினபதி, சிந்தாமணி, சூடாமணி, நவமணி, விடிவெள்ளி, சுடரொளி, தினகரன், தினக்கதிர் மற்றும்  யாழ் உதயன் உட்பட பல வெளிநாட்டு இணையத்தளங்களுக்கும் செய்திகளை வழங்கி வந்துள்ள இவர் ஒரு செய்தியாளராக மாத்திரமன்றி, இலக்கியவாதியாகவும் சமூக சிந்தனையாளராகவும்  ஆற்றிய பணிகள் அளப்பரியவை. 


குறிப்பாக நெருக்கடிமிக்க யுத்த காலத்தில் செய்திகளை உடனுக்குடன் வெளிப்படுத்துவதில் அவர் அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். 


பிராந்திய ரீதியான செய்திகளைத் தேசிய நீரோட்டத்திற்குக் கொண்டு வருவதிலும், சமூகப் பிரச்சினைகளைத் துணிச்சலுடன் வெளிப்படுத்துவதிலும் அவர் முன்னோடியாகத் திகழ்ந்தார்.


இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கத்தினால் 2018ஆம் ஆண்டு இவருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது  வழங்கி கௌரவித்ததோடு அவரது நீண்டகால ஊடக மற்றும் கலைச் சேவையைப் பாராட்டி  கலாசார அமைச்சினால் 'கலாபூஷணம்' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


ஊடகத்துறைக்காக இவர் ஆற்றிய சேவையை மதித்து , மாகாண மட்டத்தில் வழங்கப்படும் உயர் விருதான 'முதலமைச்சர் விருது' வழங்கி கௌரவிக்கப்பட்டார். 


யாழ். உதயன் பத்திரிகையின் 25 வது வருட பூர்த்தியையொட்டி கொண்டாடப்பட்ட வெள்ளி விழா நிகழ்வின் போது, இவர் ஈழத்து ஊடகத்துறைக்காக ஆற்றிய சேவையை பாராட்டி, விருது வழங்கி கௌரவிக்கப்பட்டிருந்ததோடு இன மதபேதங்களுக்கப்பால் சென்று ஊடகத் துறைக்காக சலீம் ஆற்றிய அளப்பெரிய சேவைகளை மதித்து 1995ஆம் ஆண்டில் திகாமடுல்ல பௌத்த சிங்கள அமைப்பு இவருக்கு 'சாஹித்தியசூரி' எனும் பட்டம் வழங்கி கௌரவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், தனது வருடாந்த மாநாட்டின்போது அன்னாரைப் பாராட்டி கௌரவித்தது. 


அன்னார் சுகவீனமுற்றிருந்த காலப்பகுதியில் மீடியா போரத்தின் செயற்குழு உறுப்பினர்கள் கடந்த வருட இறுதியில் அவரை நேரில் சந்தித்து நலன் விசாரித்ததையும் இந்த இடத்தில் நினைவுகூருகிறோம். 


இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் உப தலைவராக பல வருடங்கள் செயற்பட்டு வந்த சலீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவராகவும், அதன் வளர்ச்சிக்கு பல்வேறு  வகைகளிலும் பங்களிப்பு வழங்கிய ஒரு மூத்த உறுப்பினராகவும் எமது இதயங்களில் என்றும் நீங்காத இடம்பிடித்துள்ளார்.


அன்னாரின் மறைவினால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.


வல்ல அல்லாஹ் அன்னாரின் நற்செயல்களை ஏற்றுக்கொண்டு, அவருக்கு மறுமையில் 'ஜன்னத்துல் பிர்தௌஸ்' எனும் உயரிய சுவர்க்கத்தை வழங்க பிரார்த்திக்கின்றோம்.


ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம்

25.03.2026




No comments