புத்தளம் தள வைத்தியசாலை மாவட்ட பொது வைத்தியசாலையாக தரமுயர்வு. புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசல் ஜனாதிபதிக்கு புகழாரம்.
எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் தள வைத்தியசாலை மாவட்ட பொது வைத்தியசாலையாக தரமுயர்த்தப்பட வேண்டும் என்ற கனவு ஆரம்ப வேலைத் திட்டமாக மத்திய அரசின் கீழ் கொண்டு வருவதன் மூலம் மாவட்ட வைத்தியசாலைக்கான அடுத்த கட்ட பணிகள் ஆரம்பிக்கப்படவிருப்பதாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம்.பைசல் தெரிவித்தார்.
புத்தளம் தள வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வந்தமைக்காக ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் தேர்தல் தொகுதி வஞ்சிக்கப்பட்ட வரலாறே அதிகம். புத்தளம் மாவட்டத்தின் தலை நகரமான புத்தளம் உருவாக்கப்படாமல் கடந்த கால ஆட்சியாளர்கள் உருக்குழைய செய்ததே அதிகம். அரச நிறுவனங்கள், காரியாலயங்கள் என ஒவ்வொன்றாக தத்தமது தொகுதிகளுக்கு எடுத்துச்சென்று புத்தளத்தை வாக்கு சேகரிக்க மட்டுமே பயன்படுத்தினார்கள் என்பதை வேதனையோடு தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்று கூச்சலிடும் பலர் காலங்காலமாக புத்தளம் மக்களின் வாக்குகளை பெற்று ஆட்சியில் இருந்து கொண்டு புத்தளத்தை நடுத்தெருவில் விட்டவர்கள்தான் என்பதை புத்தளம் மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள். இப்போதுதான் அவர்களுக்கு கண் திறந்திருப்பதை கண்டு அழுவதா சிரிப்பதா என்று புரியவில்லை.
ஆனால் இன்று தேசிய மக்கள் சக்தி அரசின் மீதும் கௌரவ ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அவர்களின் மீதும் புத்தளம் மக்கள் வைத்த நம்பிக்கை வீண் போகவில்லை.
புத்தளம் மாவட்ட மக்களின் நீண்ட காலமாக நிலவி வந்த ஒரு பெரும் எதிர்பார்ப்பு, அல்லது பெரும் கனவு நிறைவேறும் ஒரு கட்டத்தை நெருங்கியிருக்கிறோம் என்ற நல்ல செய்தியை புத்தளம் மக்கள் கவனத்திற்கு கொண்டு வருவதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.
கடந்த ஆட்சிக்காலத்தில், நாய்கள் நடமாடும் இடமாக புத்தளம் வைத்தியசாலை இருப்பதை மக்கள் கண்ணீரோடும் கவலையோடும் வேதனை படுவதை நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க அவர்களிடம் முன் வைத்த போது நான் அதனை தரமுயர்த்தி செய்து தருவேன் என்ற வாக்குறுதியை நிறைவேற்றி தந்த ஜனாதிபதிக்கு புத்தளம் மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். புத்தளம் மக்கள் நன்றியோடு இருப்பார்கள் என்ற நம்பிக்கையும் எனக்கிருக்கிறது.
இன்று நிறைவேறும் இந்த கனவு பலரின் தியாகங்களால் நிறைவேறுகிறது. அதற்கு தேசிய மக்கள் சக்தி அரசிக்கு முதலில் நன்றி கூறிக்கொள்கிறேன்.
இந்த கோரிக்கை இன்று வெறும் ஆசையாகவோ, கோசமாகவோ இல்லை. அதற்கான முதல் நடைமுறை முயற்சியாக, இந்த வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதற்கான அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டிருப்பது புத்தளம் மாவட்ட மக்களுக்கு பெரும் நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் அளித்திருக்கிறது.
இது ஒரு சாதாரண நிர்வாகத் தீர்மானம் அல்ல. மாவட்ட சுகாதார அமைப்பை முழுமையாக மாற்றும் ஒரு முக்கியமான கொள்கை முடிவாகவே இதனை பார்க்க வேண்டும்.
இன்றைய நிலையில் புத்தளம் மாவட்ட மக்கள், சிறப்பு சிகிச்சைகள், நிபுணர் வைத்திய சேவைகள், அவசர சிகிச்சை வசதிகள் ஆகியவற்றுக்காக பல முறை வெளி மாவட்டங்களுக்கு செல்ல வேண்டிய துர்ப்பாக்கிய நிலை தொடர்கிறது. இதனால் பல மரணங்கள் கூட சம்பவித்திருக்கிறது.
இந்த நிலைமை, ஏழை மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கு பொருளாதார சுமையையும், உயிர் பாதுகாப்பு சவால்களையும் ஏற்படுத்தி வருகிறது. வந்திருக்கிறது.
இந்த தரமுயர்வு நடவடிக்கையின் மூலம், நிபுணர் வைத்தியர்களின் நிரந்தர நியமனம், நவீன மருத்துவ உபகரணங்கள், தீவிர சிகிச்சை பிரிவுகள், தாய்மை மற்றும் குழந்தை நல சேவைகள்என பல துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும்.
இதன் நேரடி பயன், புத்தளம் மாவட்ட மக்களுக்கு தங்களது சொந்த மாவட்டத்திலேயே உயர்தர மருத்துவ சேவையைப் பெறும் வாய்ப்பை ஏற்படுத்தும் என்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்த அமைச்சரவை அனுமதி ஒரு ஆரம்ப கட்ட முடிவு மட்டுமே என்பதை நான் தெளிவாகக் கூற விரும்புகிறேன். முழுமையான மாவட்ட பொது வைத்தியசாலையாக மாற்றுவதற்கு, தேவையான நிதி ஒதுக்கீடுகள், மனிதவள மேம்பாடு, நிரந்தர கட்டமைப்பு வசதிகள் என்பவை தொடர்ச்சியாக உறுதி செய்யப்பட வேண்டியுள்ளது.
அதற்காக, மாண்புமிகு ஜனாதிபதி அவர்களும், மாண்புமிகு பிரதமர் அவர்களும், மாண்புமிகு சுகாதார அமைச்சர் அவர்களும், மாண்புமிகு அமைச்சரவை உறுப்பினர்களும் இந்த முயற்சிக்கு தொடர்ந்து முழு ஆதரவை வழங்குவார்கள் என்ற நம்பிக்கையை பதிவு செய்கிறேன்.
இது அரசியல் லாபத்திற்கான நடவடிக்கை அல்ல. மக்களின் உயிர் பாதுகாப்பும், சுகாதார உரிமையும் உறுதி செய்யும் தேசிய பொறுப்பும் ஆகும்.
புத்தளம் தள வைத்தியசாலையை முழுமையான மாவட்ட பொது வைத்தியசாலையாக தரமுயர்த்தும் இந்த முயற்சிக்கு சுகாதார அமைச்சின் ஆதரவை எதிர்பார்த்து உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுக்கின்றேன்.
இதற்கு முன்னைய அரசாங்கங்களில் பலம் பொருந்திய அதிகாரமிக்க பல அமைச்சர்கள் இந்த மாவட்டத்தில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் நினைத்திருந்தால் இந்த வைத்தியசாலையை தரம் உயர்த்தி மக்களுக்கு உண்மையான சேவையினை வழங்கி இருக்கலாம். புத்தளத்தின் நிபுணர்கள் குழு இரு தொடர்பான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பு இன்மையால் அவைகள் கைகூடாமல் போனது.
எமது அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர் இது தொடர்பான முயற்சிகளை நான் புத்தளம் புத்தி ஜீவிகளினது ஒத்துழைப்புடன் முன்னெடுத்தேன்.
தேர்தல் காலங்களில் புத்தளத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி அவர்கள் புத்தளம் தள வைத்தியசாலையைத் தரம் உயர்த்தி தருவதாக வாக்களித்திருந்தார். இன்று அந்த வாக்குறுதியை அவர் கச்சிதமாக நிறைவேற்றி இருக்கிறார். அதற்காக எமது ஜனாதிபதி அவர்களுக்கும் தனிப்பட்ட நன்றிகளை இந்த சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இந்த நடவடிக்கையை வெற்றி பெற முன்னின்று உழைத்த புத்தளம் அரச வைத்தியர்களுக்கும், புத்தளம் புத்தி ஜீவிகளுக்கும், வடமேல் மாகாண ஆளுநர் உட்பட சகல சுகாதார திணைக்கள அதிகாரகளுக்கும், மத்திய அரசின் சுகாதார தினைக்கள அதிகாரிகளுக்கும், விசேடமாக சுகாதார அமைச்சர் நளின்த ஜயதிஸ்ஸ அவர்களுக்கும் புத்தளம் மாவட்ட அபிவிருத்தி குழு தலைவர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், புத்தளம் மாவட்ட அதிபர், புத்தளம் நகர மேயர் உட்பட உறுப்பினர்கள் அனைவருக்கும், புத்தளம் மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
இது எமது சந்ததிக்கானபணி. நாம் இழந்ததை நமது சந்ததிக்காக கொண்டு சேர்ப்பேம். அதில் தூய்மையாக இணைந்து செயல் படுவோம்.

No comments