ஏழு பர்ச்சஸ் காணி பெற்ற மலையக மக்களுடனான விஷேட கலந்துரையாடல்
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பு (VOPP) , 1993 முதல் 2023 வரை காலப்பகுதியில் தோட்டப்பகுதிகளில் அரசாங்கத்தின் பல்வேறு காணி வழங்கல் திட்டங்களின் கீழ் ஏழு பர்ச்சஸ் (perches) நிலம் பெற்ற மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்த மலையகத் தமிழ் மக்களுடனான ஒரு சிறப்பு கலந்துரையாடல் இடம்பெற்றது
இக்கலந்துரையாடலின் நோக்கம், காணி வழங்களின் தற்போதைய நிலைமை குறித்து புரிதலைப் பெறுவதும், குறிப்பாக சட்டபூர்வ உரிமைச் சான்றுகள் மற்றும் அவர்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் சரியான ஆவணங்கள் இல்லாத காரணத்தால் பயனாளிகள் எதிர்கொள்ளும் சவால்களை அடையாளம் காண்பது என்பனவாகும்
இதன் போது, அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்ட உரிமைச் சான்றுகள் இல்லாமை, நிலம் வழங்கப்பட்டதை உறுதிப்படுத்தும் அடிப்படை ஆவணங்கள் இல்லாமை, மேலும் பல காணிகள் முறையாக கணக்கெடுக்கப்பட்டு அளவிடப்படாதது போன்ற பிரச்சினைகள் குறித்து பயனாளிகள் தங்களது அனுபவங்களையும், கவலைகளையும் பகிர்ந்துகொண்டனர்.
இந்த நிலைமை காரணமாக, பல ஆண்டுகளாக அந்த காணிகளில் வசித்து வரும் குடும்பங்கள் சட்டபூர்வ அங்கீகாரம் இல்லாமல் வாழ வேண்டிய சூழ்நிலை உருவாகி, அவர்களுக்குள் குறிப்பிடத்தக்க அந்நிச்சயத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சந்திப்பு, மலையக சமூக உறுப்பினர்களுக்கு தங்களது அனுபவங்களையும் கவலைகளையும் ஒருங்கிணைந்த முறையில் முன்வைக்க ஒரு வாய்ப்பை வழங்கியது. மேலும், இவ்விடயங்களை தீர்ப்பதற்காக எதிர்காலத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்பட்டது
மலையகத் தமிழ் சமூகங்களின் நில உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்களுக்கு உரிய சட்டபூர்வ ஆவணங்களைப் பெற்றுத்தரவும் மேற்கொள்ளப்படும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, பெருந்தோட்டத்துறை மக்கள் குரல் அமைப்பு (VOPP) இந்த கலந்துரையாடலை ஏற்பாடு செய்து ஒருங்கிணைத்தமை குறிப்பிடத்தக்கது.





No comments