லிபிய சர்வதேச அல்-குர்ஆன் போட்டியில் இலங்கைக்கு 4-வது இடம், இமாம் ஷாபிஈ அரபுக் கலாசாலை சர்வதேச ரீதியில் சாதனை!
லிபியாவில் அண்மையில் இடம்பெற்று முடிந்த சர்வதேச அல்-குர்ஆன் மனனப் போட்டியில், இலங்கை சார்பாகப் பங்கேற்ற அல்-ஹாபிழ் முஹம்மது பர்ஷாத் பாஹீம் (Al Hafil Mohamed Farshad Fahim) நான்காம் இடத்தைப் பெற்று நாட்டுக்கு சர்வதேச ரீதியில் பெருமை சேர்த்துள்ளார். கொழும்பு 06, கிருலப்பனையில் அமைந்துள்ள இமாம் ஷாபிஈ அரபுக் கலாசாலையின் (Imam Shafiee Institute) பழைய மாணவர் சங்கம், தமது மாணவரின் இந்த மகத்தான சர்வதேச வெற்றியை மிகுந்த மகிழ்ச்சியுடன் அறிவித்துள்ளது.
2026 பிப்ரவரி 22 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரை லிபியாவில் நடைபெற்ற இப்போட்டி, உலகெங்கிலும் உள்ள சிறந்த ஹாபிழ்களுக்கு மத்தியில் மிகக் கடுமையான சவால்கள் நிறைந்த போட்டியாக அமைந்தது. இலங்கை காரிகள் அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தி இப்போட்டியில் பங்குபற்றிய பர்ஷாத் பாஹீம், தனது அபாரமான திறமையினை வெளிப்படுத்தி, நான்காவது இடத்தைப் பெற்றது மாத்திரமன்றி 80,000 லிபிய தினார்களையும் பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். .
புத்தளம் மாவட்டம் கடையாமோட்டையைச் சேர்ந்த இவர், தற்போது இமாம் ஷாபிஈ அரபுக் கலாசாலையின் ஷரீஆ மாணவராகப் பயின்று வருகின்றார். ஏற்கனவே உள்நாட்டு மற்றும் சர்வதேச ரீதியிலான பல்வேறு போட்டிகளில் பல விருதுகளை வென்றுள்ள இவர், அல்குர்ஆன் மீதான தனது அர்ப்பணிப்பையும் ஆழ்ந்த ஈடுபாட்டையும் இச்சாதனையின் மூலம் மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியுள்ளார்.
இவரது இந்த வரலாற்று அடைவு எமது தாய்நாட்டிற்கும், அவர் கல்வி பயிலும் மத்ரஸாவிற்கும், வழிகாட்டிய உஸ்தாத்மார்களுக்கும் மற்றும் அவரது பெற்றோர்களுக்கும் அளப்பரிய கௌரவத்தைத் தேடித்தந்துள்ளது.
அல்லாஹு த ஆலா இவருக்கு ஈருலகிலும் வெற்றிகளை வழங்கி, உயர்வான அந்தஸ்துகளை வழங்க வேண்டுமென இமாம் ஷாபிஈ அரபுக் கலாசாலையின் பழைய மாணவர் சங்கம் இச்சிறப்பான தருணத்தில் பிரார்த்திக்கின்றது.
Alumni Association of Imaam Shafiee Institute Sri Lanka

No comments