புத்தளம் ஆனமடுவயில் காணி உரிமை பத்திரம் வழங்கும் நிகழ்வு
(கற்பிட்டி நிருபர் சியாஜ்)
தாம் வசிக்கும் காணிகளுக்குப் பல வருடங்களாக சட்டபூர்வமான காணி உரிமை பத்திரம் இன்றி பாதிக்கப்பட்ட மக்களுக்கு காணி உரிமைகளை வழங்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தலைமையில் செவ்வாய்க்கிழமை (24) புத்தளம், ஆனமடுவ பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
ஆனைமடுவ, நவதத்தேகம, கருவலகஸ்வெவ, மகாகும்புக்கடவல மற்றும் வனாத்தவில்லுவ போன்ற பகுதிகளில் வாழும் மக்கள், ஒரு அங்குல நிலத்தையேனும் சட்டபூர்வமாகத் தமதாக்கிக் கொள்ள முடியாமல் நீண்டகாலமாக பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருந்ததாகவும் குறிப்பாக இந்தப் பிரதேசங்களிலேயே பிறந்து, இங்கு வியர்வை சிந்தி உழைக்கும் சாதாரண மக்களுக்குரிய காணி உரிமையை வழங்குவது அரசாங்கத்தின் முதன்மைக் கடமையாகும் என அமைச்சர் பேராசிரியர் சந்தன அபயரத்ன தனதுரையில் வலியுறுத்தினார்.
இந்த வேலைத்திட்டம் அரசியல் கட்சிப் பேதங்களுக்கு அப்பாற்பட்டு வெளிப்படைத்தன்மையுடன் நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் கடந்த காலங்களில் அரசியல் அல்லது தனிப்பட்ட நெருக்கங்களின் அடிப்படையில் காணிகள் வழங்கப்பட்ட போதிலும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் எந்தவொரு அரசியல் பேதமுமின்றி தகுதியின் அடிப்படையில் மாத்திரமே காணிகள் வழங்கப்படுவதாகவும் இந்தச் செயற்பாட்டின் மூலம் அரசியல்வாதிகளோ அல்லது அதிகாரிகளோ எவ்வித தனிப்பட்ட இலாபத்தையும் எதிர்பார்க்கவில்லை என்றும், மக்களின் அடிப்படைத் தேவையை நிறைவேற்றுவதே இதன் நோக்கம் என்றும் தெரிவித்த அமைச்சர்
நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் வளமான நாடு, அழகான வாழ்க்கை கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க, மக்களுக்கு கௌரவமான வாழ்க்கையைப் பெற்றுக்கொடுப்பதே அரசாங்கத்தின் இலக்காகும். "காணி உரிமையும் தலைக்கொரு கூரையும் இன்றி அழகான வாழ்க்கையை அடைய முடியாது" எனக் குறிப்பிட்ட அமைச்சர்
வீடற்ற மக்களுக்கு வீடுகளை வழங்குவதற்காக கடந்த ஆண்டு முதல் " சொந்தமான ஓரிடம், அழகான வாழ்க்கை " எனும் தேசிய வீடமைப்பு உதவித் திட்டத்தை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாகவும் வழங்கப்படும் இந்தக் காணிகளை எக்காரணம் கொண்டும் விற்பனை செய்ய வேண்டாம் என மக்களிடம் கேட்டுக்கொண்ட அமைச்சர்
அவற்றில் தமது குடும்பங்களுடன் மகிழ்ச்சியாக வாழ்வதுடன், காணிகளைப் பயனுள்ள வகையில் பயிரிட்டு அபிவிருத்தி செய்யுமாறும் வலியுறுத்தினார்.
தற்போதைய அரசாங்கம் நாட்டின் அபிவிருத்தித் திட்டங்களைச் செயல்படுத்தும் போது உட்கட்டமைப்பு வசதிகள் குறித்தும் விசேட கவனம் செலுத்தியுள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர்
காணி உரிமைகளை வழங்குவதற்கு மேலதிகமாக, அப்பகுதிகளில் காணப்படும் நீர், மின்சாரம் மற்றும் வீதிப் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றைத் தீர்ப்பதற்கும் அரசாங்கம் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கும் எனவும் அமைச்சர் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில் பிரதேச மக்கள் பிரதிநிதிகள், ஆனமடுவ பிரதேச செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பெருமளவிலான பொது மக்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.




No comments