JobVibe.lk - Sri Lanka Job Portal

திருகோணமலை பிணக்கின் உரையாடலை எந்தப்புள்ளியில் இருந்து தொடரலாம்..?

✍️ அஷாம் முஹம்மத்

இலங்கைப் போன்ற பல்லின சமூக கலாச்சார நாட்டில் சிலரின், சில அமைப்புக்களின், சில கட்சிகளின் சுயநல  இனவாதம் என்ற தீ அடிக்கடி கொழுத்தப்பட்டது/ கொழுத்தப்படுகிறது. இலங்கைப் போன்ற அரசியல் நவீனத்தும் அடையாத நாடுகளில் உணர்ச்சிகளும்/உணர்வுகளுமே மக்களை ஆளும்.


இப்போது சிலையை அகற்றுவது ஒரு தரப்பை மகிழ்விக்கும்; அடுத்த தரப்பை காயப்படுத்தும்,சிலையை வைப்பதும் ஒரு தரப்பை மகிழ்விக்கும் அடுத்த தரப்பை காயப்படுத்தும். இச் சந்தர்ப்பத்தில் மக்களின் மனோநிலை  அரசாங்க தரப்பை நோக்கி திரும்பும். தற்போதைய பிணக்கு ஒரு உடனடிப் பிரச்சினையக கருதாமல் அதன் ஆணி வேரைத் தாக்கி, மீண்டும் ஒரு மோதல் ஏற்படாமல் தடுப்பதே அரசாங்கத்தின் தலையாய நோக்கமாக இருக்க வேண்டும்.


இந்த உரையாடலை எதிர்கால இனவாத தீ பற்ற வைக்காமல் எப்படி முறைசார் சட்ட ரீதியாக தடுக்கலாம் என்ற புள்ளியில் இருந்து ஆரம்பிக்கப்படுவது ஆரோக்கியமானது.  


மத மற்றும் கலாச்சாரத் தளங்களை அமைப்பதற்கான இறுக்கமான சட்டக் கட்டமைப்பை உருவாக்குதல் வேண்டும்.

தற்போதுள்ள சட்டங்களில் உள்ள வெற்றிடங்களே இதுபோன்ற பிணக்குகள் உருவாக அடிப்படைக் காரணம். எனவே, மதத் தளங்களை அமைப்பதற்கான முறைசார்ந்த, இறுக்கமான ஒழுங்குபடுத்தப்பட்ட சட்ட ஏற்பாடுகள் உடனடியாக உயிர் பெற வேண்டும்.


இந்தச் சட்டங்களை உருவாக்கும்போது, ஒரு தரப்புக் குழுமமாக இல்லாமல், சகல இன, மத, கலாச்சார மற்றும் சட்ட வல்லுநர்களைக் கொண்ட ஒரு சுயாதீனமான, பக்கச்சார்பற்ற ஆணைக்குழுவை அமைக்க வேண்டும்.


சட்ட ஏற்பாடுகள் உருவாக்கப்பட்டு விட்டால் மட்டும் போதாது, அவை மக்கள் மயப்படுத்தப்பட வேண்டும். அச்சிடப்பட்ட சட்டங்களால் ஒரு போதும் சமூக மாற்றத்தை ஏற்படுத்தி விட முடியாது.


கடந்த கால அனுபவங்களை நடுநிலை ஆய்வு செய்தல் கட்டாயமானது.

இலங்கையில் உள்ள மத மற்றும் கலாச்சார இடங்கள் தொடர்பான கடந்த காலப் பிணக்குகள், நீதிமன்றத் தீர்ப்புகள் மற்றும் அரசாங்கத்தின் கொள்கைத் தவறுகள் பற்றிய ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட, பக்கச்சார்பற்ற ஆய்வு உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும்.


இந்த ஆய்வு எந்த இனத்தையும் அல்லது மதத்தையும் குற்றஞ்சாட்டுவதற்காக அமையாமல், சட்ட ஏற்பாடுகளில் உள்ள ஓட்டைகளை அடையாளம் காணவும், பிணக்குகள் எழும்போது அரசாங்கம் எவ்வாறு நீதியுடன் கையாண்டது/கையாள வேண்டும் என்பதற்கான தரவுகளை அடிப்படையாகக் கொண்ட பரிந்துரைகளை  வழங்கவும் பயன்படுத்தப்பட வேண்டும்.


கல்வித் திட்டத்தின் ஊடான மாற்றீடே நிலைபேறான வெற்றியாகும்.

அடுத்த தலைமுறைக்கு சமாதானமான சகவாழ்வு  மனோநிலையைக் கடத்துவதே இனவாதத் தீயை அணைப்பதற்கான நிரந்தரமான முதலீடு ஆகும். இனவாதம், பாகுபாடு ஆகியவை ஒருவரின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும், நாட்டின் வளர்ச்சிக்கும் எவ்வாறு இடையூறாக அமைகின்றன என்பது குறித்த சமூக உளவியல் (Social Psychology) கூறுகளைக் கல்வித் திட்டத்தில் கட்டாயப் பாடமாக அறிமுகப்படுத்துதல் சாதகமான மனோநிலையை எதிர்கால சந்ததிகளிடம் துளிர்விடச் செய்யும்..


"இனவாதத் தீயைக் கக்குவது தண்டனைக்குரிய குற்றம்" என்ற சட்டரீதியான மனோநிலையை வெறுமனே சட்டமாக இல்லாமல், பாடசாலையிலிருந்து ஒரு சமூகப் பொறுப்பாகக் கற்பித்தல் வேண்டும் என்ற அடித்தளம் பலமாக பாடசாலைகளில் இடப்பட வேண்டும்.


இனவாதத் தீயை முழுமையாக அணைக்க முடியாது. ஆனால், அரசாங்கத்தின் வெற்றி என்பது, எறியப்படும் இனவாதத் தீயை எந்த அளவில் கட்டுப்படுத்தி வைத்துள்ளோம் என்பதைப் பொருத்தே தீர்மானிக்கப்படுகிறது.


திருகோணமலை பிணக்கு போன்ற சங்கட நிலைமைகள், இலங்கையில் சட்டத்தின் ஆட்சிக்கும், பல்லினச் சமூகத்தின் சகிப்புத்தன்மைக்கும் உள்ள சவால்களை எடுத்துக்காட்டுகிறது. இந்த உரையாடலை, வெறுமனே ஒரு சிலையை அகற்றுவதா அல்லது வைப்பதா என்ற வட்டத்துக்குள் சுருக்காமல், எதிர்காலத்தில் எந்தவொரு இனமோ அல்லது மதமோ தங்களின் இருப்பை நிலைநாட்டுவதற்காக சட்டத்தின் ஆட்சியை மீற வேண்டியதில்லை என்ற உத்தரவாதத்தை வழங்குவதற்கான சட்ட மற்றும் சமூக அடித்தளத்தை அமைப்பதாக மாற்றுவதே உண்மையான வெற்றியாகும்.




Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال