Breaking News

அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் புத்தளம் முன்பள்ளி ஆசிரியைகளும் களம் இறங்கினர்.

எம்.யூ.எம்.சனூன்

அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் புத்தளம் மாநகர சபை மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மதின் வேண்டுகோளை ஏற்று முன்பள்ளி ஆசிரியைகள் களம் இறங்கினர்.


புத்தளம் சவீவபுரத்தில் அமைந்துள்ள முன்பள்ளி ஆசிரியைகள் பயிற்சி நிலையத்தில் சுற்று சூழலை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யும் பணியிலேயே இவர்கள் ஒன்றிணைந்தனர்.


முன்பள்ளி ஆசிரியைகள் சங்கத்தின் தலைவி அமிதா எதிரிசிங்க தலைமையில் செவ்வாய்க்கிழமை (18) காலை நடைபெற்ற இந்த சிரமதான பணியில் புத்தளம் மாநகர சபையின் சமூக அபிவிருத்தி அதிகாரி திருமதி ரதி பிரதீப், முன்பள்ளிகளுக்கான பொறுப்பதிகாரி திருமதி தயானி உள்ளிட்ட முன்பள்ளிகளின் பொறுப்பாசிரியர்களும் கலந்து கொண்டனர்.


"சுற்றுச்சூழல் சிரமதான பணிகளில் மாநகர சபையை மாத்திரம் தங்கி இருக்காமல் ஒவ்வொரு தனி மனிதனும் தனது முழுமையான பங்களிப்பை வழங்க முன் வரவேண்டும்" என புத்தளம் மாநகர சபையின் மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் அண்மையில் முன்பள்ளி ஆசிரியைகள் மத்தியில்  உரையாற்றும்போது தெரிவித்திருந்தார்.


புத்தளம் சவீவபுரத்தில் அமைந்திருக்கின்ற முன்பள்ளி ஆசிரியர்கள் பயிற்சி நிலையத்தில் வைத்தே அவர் இதனை தெரிவித்திருந்தார்.


அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் புத்தளம் நகரில் இந்த சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விடயத்தில் நாம் முழு வீச்சாக இறங்கியுள்ளோம். இது விடயத்தில் முன்பள்ளி ஆசிரியர்கள் எம்மோடு இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும் எனவும் அவர் அறைகூவல் விடுத்திருந்தார்.


இதனையடுத்தே புத்தளம் நகரின் அனைத்து முன்பள்ளிகளின் ஆசிரியைகளும் இத்திட்டத்தில் இணைந்து கொள்ளும் பொருட்டு இந்த சிரமதான பணியில் அதிரடியாக களம் இறங்கினர்.













No comments