JobVibe.lk - Sri Lanka Job Portal

ஜனாஸா எரிப்புக்கெதிரான வழக்கு; நகர்த்தல் பத்திரம் ஏற்கப்பட்டு உச்ச நீதிமன்றில் இன்று விசேட அமர்வு;

(அஸ்லம் எஸ்.மௌலானா)

கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்போரின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் இன்று வியாழக்கிழமை (26) உச்ச நீதிமன்றத்த்தில் விசேடமாக எடுத்துக் கொள்ளப்படவுள்ளன.

கொவிட்-19 தொற்று அபாய சூழ்நிலை காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், நேற்று புதன்கிழமை மின்னஞ்சல் மூலம் தாக்கல் செய்யப்பட விசேட நகர்த்தல் பத்திரங்களை ஏற்றுக்கொண்டு, மேற்படி அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகளை இன்று முன்னெடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

உச்ச நீதிமன்ற நீதியரசர்களான உவனக அலுவிஹார, சிசிர டி.ஆப்ரூ, வி.ஏ.ஜி.அமரசேகர ஆகியோர் முன்னிலையில் இவ்விசாரணைகள் இடம்பெறவுள்ளன.

இந்த அடிப்படை உரிமை மனுக்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ், எம்.ஏ.சுமந்திரன், நிஸாம் காரியப்பர், விரான் கொரயா மற்றும் என்.எம்.சஹீட் உள்ளிட்ட பல சிரேஷ்ட சட்டத்தரணிகள் ஆஜராகின்றனர்.

கொவிட்-19 தொற்று நோயினால் மரணிப்போரின் உடல்கள் எரிக்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சரினால் வெளியிடப்பட்டிருக்கின்ற வர்த்தமானி இரத்துச் செய்யப்பட்டு, எரிப்பு நடவடிக்கைக்கு எதிராக தடையுத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் எனக் கோரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலிஸாஹிர் மௌலானா உள்ளிட்ட பல தரப்பினராலும் இந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்கள், பல மாதங்களுக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. கடந்த ஜூன் மாதம் 08ஆம் திகதியும் ஜூலை மாதம் 13ஆம் திகதியும் இம்மனுக்கள் பரிசீலனைக்கு எடுக்கப்பட்டிருந்தன. எனினும் இதுவரை தீர்ப்பு அறிவிக்கப்படவில்லை.

கொவிட்-19 தொற்று நோயினால் மரணிக்கின்ற முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படுகின்ற விவகாரத்தினால் முஸ்லிம்கள் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ள சூழ்நிலையில், பல்வேறு தரப்பினரும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு அனுமதிக்குமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்து வருகின்ற நிலையில், இன்று உச்ச நீதிமன்றத்தில் விசேடமாக எடுத்துக் கொள்ளப்படுகின்ற மனுக்கள் மீதான விசாரணைகளின்போது, சுகாதார அமைச்சின் இணக்கப்பாட்டுடன் சட்டமா அதிபர் திணைக்களம் ஆட்சேபனை எதுவும் தெரிவிக்காவிடின் சாதகமான தீர்ப்பு கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான நிஸாம் காரியப்பரிடம் கேட்டபோது; சட்டமா அதிபர் ஆட்சேபனை தெரிவிக்காத பட்சத்தில், ஜனாஸா எரிப்புக்கெதிரான தடையுத்தரவு கிடைக்க வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்ட அவர், சுகாதார அமைச்சிடமிருந்து எவ்வாறான அறிவுறுத்தல்களை சட்டமா அதிபர் பெற்றிருக்கிறார் என்பது தொடர்பில் தமக்கு அறியக்கிடைக்கவில்லை எனத் தெரிவித்தார்.






Previous Post Next Post
🌐 Select your Language
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

ads

نموذج الاتصال