எம்.யூ.எம்.சனூன்
உலுக்காப்பள்ளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் என்.நஜா அஹ்மத், கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய மட்ட முஸ்லிம் கலாசார அதான் போட்டியில் கலந்து கொண்டு 3ஆம் இடத்தை பெற்றுள்ளார்.
நாடளாவிய ரீதியில் ஒன்பது மாகாணங்களிலும் தெரிவு செய்யப்பட்ட திறமைமிக்க மாணவர்கள் கலந்து கொண்ட இப்போட்டித் தொடரின் ஆரம்ப விழாவிற்கு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் உதவிச் செயலாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
முஸ்லிம் பிரிவு கல்விப் பணிப்பாளர் மேஜர் என்.டி. நசுமுதீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், நடுவர்களாகப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், கல்வித்துறைசார் விரிவுரையாளர்கள், உலமாக்கள், முஸ்லிம் சமயத்துறை சார்ந்தோர்கள், கல்விமான்கள், ஆசிரியர்கள் மற்றும் கல்வி அமைச்சின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த மாணவனின் வெற்றியானது சுமார் ஒரு தசாப்தத்தின் பின்னர் உலுக்காப்பள்ளம் முஸ்லிம் மகா வித்தியாலயத்திலிருந்து மீண்டும் தேசிய மட்டத்திற்கு தடம் பதித்த வெற்றியாகும்.
இந்த வெற்றியை பெற்றமைக்காக வேண்டி மாணவன் நஜா அஹமதையும் அவரது பெற்றோரையும் பாராட்டி கெளரவப்படுத்தும் நிகழ்வு (16) பாடசாலையின் முகாமைத்துவ குழுவினால் மிகச் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாணவர்கள் அணிவகுத்து நிற்க பேண்ட் வாத்தியக்குழு, களிகம்பு குழு, கலாச்சார குழுவினர்கள், பகுதித் தலைவர்கள், பொறுப்பாசிரியர்கள், ஏனைய ஆசிரியர்கள், பெற்றோர்களும் இணைந்து மாலை அணிவித்து கெளரவித்தமை விஷேட அம்சமாகும்.
அனைத்து விடயங்களையும் பாடசாலையின் உதவி அதிபர் ஆர்.றிஸான் ஒருங்கிணைப்புச் செய்ததுடன் அதிபர் பி.பஸ்மியா, உப அதிபர் அனீஸ், பகுதித்தலைவர் நஸ்ஹத் ஆகியோர் பதக்கம், பரிசில்களையும் வழங்கிவைத்தனர் .
உப அதிபர் எம். நியாஸ் ,அஷ்ஷேய்ஹ் எச்.எம். நிஹால் ஆகியோர் நிகழ்வுகளை தொகுத்து வழங்கினார்கள்.




