(அஸ்லம் எஸ்.மௌலானா)
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பிரதி ஆணையாளர் திருமதி ஆவா டாபோ அவர்களை ஐ.நா. சிறுபான்மையினர் புலமைப்பரிசிலாளர், சட்டமாணி ஹக்கானி மஜீத் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு ஜெனிவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இதன்போது இலங்கையின் தற்போதைய மனித உரிமைகள் நிலைமை மற்றும் தமிழ், முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்கொள்ளும் சில முக்கியமான பிரச்சினைகள் குறித்து அவர்கள் உரையாடியுள்ளனர்.
குறிப்பாக நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் தொடர்பில் நிலவும் சவால்கள் பற்றி ஹக்கானி மஜீத் எடுத்துரைத்துள்ளார்.
அரசியல் மாற்றங்களுக்கு மத்தியிலும், சிறுபான்மைச் சமூகங்களின் நீண்டகாலப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அதேபோன்று, தெற்காசியாவின் ஏனைய நாடுகளில் சிறுபான்மைச் சமூகங்கள் எதிர்கொள்ளும் நிலைமைகள் குறித்தும் கருத்துகளை பரிமாறிக் கொண்டனர்.
இந்த சந்திப்பு எமது பிராந்தியத்தின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வதற்கும், சர்வதேச மனித உரிமைப் பொறிமுறைகளின் பணிகள் குறித்து மேலும் அறிந்துகொள்வதற்கும் நல்ல வாய்ப்புகளை வழங்கியதாக ஹக்கானி மஜீத் தெரிவித்தார்.
