முன்னாள் அமைச்சர் வேதாந்தி எம்.எச். சேகு இஸ்ஸதீன் இறையடி சேர்ந்து இன்றுடன் (2024 .11. 28) இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இணைந்த வடக்கு- கிழக்கு மாகாணத்தின் முதலாவது மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபக தவிசாளரும் கலைஞரும் கவிஞரும் சட்டத்தரணியுமான வேதாந்தி எம்.எச். சேகு இஸ்ஸதீன் இறையடி சேர்ந்து இன்று (2024 .11. 28) இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அவரது பணிகளை நினைத்துப் பார்க்கின்றோம்.
இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றிலும் தமிழ் இலக்கிய உலகிலும் தனக்கென அழியாததோர் அடையாளத்தைப் பதித்ததுடன் . அரசியல் அரங்கில் சேகு இஸ்ஸதீன் எனவும், இலக்கிய உலகில் 'வேதாந்தி' எனவும் அறியப்பட்ட இவர், பன்முக ஆளுமை கொண்ட தனித்துவமான மனிதராக விளங்கினார்.
1944ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் திகதி சுபைதா உம்மா முகமது ஹஸன் தம்பதிகள் உரைத்தெடுத்த செந்தூரம் வேதாந்தி எம்.எச். சேகு இஸ்ஸதீன் பறந்து வரும் பறவை எனப் பார்த்திருந்தோம் அவர் இறந்து விட்ட செய்தியை இன்னும் இதயத்தால் ஏற்க முடியவில்லை
எம்.எச். சேகு இஸ்ஸதீன் அவர்கள், அம்பாறை மாவட்டத்தின் அக்கரைப்பற்றைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இளமைப் பருவத்திலிருந்தே வாசிப்பு, எழுத்து, இலக்கியம் மற்றும் சமூகச் சிந்தனை ஆகியவற்றில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். அறிவுத் தேடலையும் சமூகப் பொறுப்புணர்வையும் தனது வாழ்வின் முக்கிய அம்சங்களாகக் கொண்டிருந்த அவர், கல்வி மற்றும் சட்டத்துறையின் ஊடாகத் தனது பொதுவாழ்வுப் பயணத்தை முன்னெடுத்தார்.
சட்டத்துறையில் பயின்று சட்டத்தரணியாகத் தகுதிபெற்ற பின்னர், சமூக மற்றும் அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார்.
இலங்கை முஸ்லிம்களின் அரசியல் உரிமைகள், சமூக அடையாளம், பிராந்திய அபிவிருத்தி மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகிய விடயங்களில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தார்.
மறைந்த பெருந்தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களுடன் இணைந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்பகால வளர்ச்சியில் முக்கிய பங்களிப்பை வழங்கினார். அத்துடன் அக்கட்சிக்கான அரசியல் யாப்பை வரைந்ததுடன் கட்சியின் மரச் சின்னத்தையும் அவரே உருவாக்கினார். மேலும் அக்கட்சியின் இரண்டாம் நிலை தலைவராகவும் ஸ்தாபகத் தவிசாளராகவும் பணியாற்றினார்.
முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் கொண்டு சென்று அக்கட்சியினை தலைவர் அஸ்ரப்புடன் இணைந்து தூக்கி வளர்த்தவர் எம்.எச். சேகு இஸ்ஸதீன் ஆகும்.
1988 இல் நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் அம்பாறை, மட்டக்களப்பு, திருவோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் முஸ்லிம் பெரும்பான்மை மாகாண சபை கோரிக்கையை முன்வைத்து அத்தேர்தலில் 17 மாகாண சபை உறுப்பினர்களை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி வென்றேடுப்பதற்கு முதன்மையானவராகவும் முழு நேர ஊழியராகவும் இருந்து செயற்பட்டவர் வேதாந்தி சேகு இஸ்ஸதீன் ஆகும்.
இந்தியாவில் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடந்த போது "இந்தியா டைம்ஸ்" என்ற ஆங்கில பத்திரிகை வேதாந்தி சேகு இஸ்ஸதீன் இலங்கையின் தலைசிறந்த கவிஞன் என்று புகழ்ந்து எழுதி இருந்தமை மறக்க முடியாத நிகழ்வாகும்..
எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இருந்த போதிலும் அக்கால அரசின் அழைப்பை ஏற்று ஆழம் கட்சியின் பிரதி ஊடகத்துறை அமைச்சராகவும் பின்னர் பிரதி தகவல் ஊடகத்துறை அமைச்சராகவும் அதன் பின்னர் பெருந்தெருக்கள் பிரதி அமைச்சராகவும் உதவி கிராமிய கைத்தொழில் அமைச்சராகவும் இறுதியில் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சராகவும் பதவி வகித்து அம்பாறை மாவட்டத்திலுள்ள அதிகமான கிராமங்களுக்கு அந்தந்த ஊர்களை சேர்ந்தவர்களுக்கு இணைப்பாளர் பதவிகளை வழங்கி அவர்களின் ஆலோசனையை பெற்று அதிகமான இளைஞர், யூவதிகளுக்கு வேலை வாய்ப்பை வழங்கியதுடன் அக்கிராமங்களின் முக்கியமான அபிவிருத்தி பணிகளையும் மேற்கொண்டார்.
அந்த வகையில் மருதமுனை கிராமத்தில் கடல் வாழ் மீனவ தொழிலாளர்களின் நலன் கருதி கடற்கரை ஓரத்தில் ஒரு வெளிச்ச வீட்டை அமைத்துக் கொடுத்தார்.
கல்முனை பொதுச்சந்தை வாழைப்பழம் விற்பனை செய்யும் வீதி குன்றும் குழியுமாக காணப்பட்டது. அதனை கொங்கிரீட் பாதையாக அமைத்துக் கொடுத்தார். நற்பிட்டிமுனை கிராமத்தில் அல் - அக்ஸா மகா வித்தியாலயத்தில் வடிகான் திட்டம் மற்றும் பேன்ட் வாத்திய இசை க் கருவிகளையும் வழங்கியதுடன் அக்கிராமத்தில் உள்ள முக்கிய வீதிகளையும் புனரமைப்பு செய்து கொடுத்தார்.
அரசியல் முதிர்ச்சியும் ஆழமான அறிவும் உள்ள தென்கிழக்கின் தேசியவாதிகளின் ஸ்தாபகத் தலைவர் சேகு இஸ்ஸதீன் தான் பிறந்த கிராமமான அக்கரைப்பற்றில் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தென்கிழக்கு பிராந்தியத்திற்கான பிறை FM சேவையினை 2005.11.05 அந் திகதி ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க, தமிழ் சேவை பிரிவின் பணிப்பாளர் ருத்ராபதி ஆகியோரின் பங்கு பெற்றலுடன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். மேலும் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களுக்கும் இவரது சேவை பரந்து, விரிந்து காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது.
பெருந்தலைவர் எம்.எச்.எம். அஸ்ரப் அவர்களினால் உருவாக்கப்பட்ட தேசிய ஐக்கிய முன்னணிக் கட்சியினை அவரது மறைவுக்கு பின்னர் அவரது மனைவி திருமதி பேரியல் அஷ்ரப் அவர்கள் கட்சியின் தலைவராகவும் வேதாந்தி சேகு இஸ்ஸதீன் செயலாளராகவும் இருந்து கட்சியின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து வந்தார்.
வட- கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் சுவிட்சம் தென்கிழக்கு முஸ்லிம் தேசியவாதிகள் இயக்கத்தின் சிந்தனை தலைமைத்துவ வழிகாட்டலை ஒட்டியதாக இருக்கும்படி செய்ய வேண்டும். நாம் ஓர் தேசிய இனம் என்ற இலக்கை அடைய விரைய வேண்டும். இலங்கை அரசியல் தீர்வுகளில் முஸ்லிம்களும் ஒரு தேசிய இனம் என்பதை நிலைநாட்ட நாம் அனைவரும் முஸ்லிம் தேசியவாதிகளாக வேண்டும் என்ற சிந்தனையை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் விதைத்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் ஆட்சியில் இறுதியாக ஏற்றுமதி அமைச்சராக இருந்தபோது முஸ்லிம்களுக்கு எதிரான விரோத போக்கில் அரசாங்கம் சென்று கொண்டிருப்பதை அவதானித்து பாராளுமன்றம் கலைவதற்க்கு ஐந்து மாதங்களுக்கு முன்னர் தனது அமைச்சுப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இறக்காமம் மதினாபுரத்தின் மலை உச்சியில் ஒரு வாசஸ்தலத்தையும் தியான பீடத்தையும் நிர்மாணித்து அந்த இடத்திலேயே வாழ்ந்து வந்தார்.
அவரால் உருவாக்கப்பட்ட சேகுமலையும் வாசஸ்தலத்தையும் பார்ப்பதற்கு கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நாட்டின் நாலாபுறத்திலிருந்தும் சகல இன மக்களும் தினந்தோறும் வருகை தந்து பார்வையிட்டு வந்தார்கள். அவர் அந்த மலையில் குடியேறியதற்கு பின்னர் அந்த இடம் சேகுமலை உச்சி என்று இன்று வரையும் அழைக்கப்பட்டு வருகின்றது.
அரசியல் அதிகாரத்தை வெறுமனே பதவிக்கான வாய்ப்பாகக் கருதாமல், சமூகத்தின் எதிர்காலம் தொடர்பான கருத்துக்களை முன்வைக்கும் தளமாகப் பயன்படுத்தினார். அரசியல் கருத்து வேறுபாடுகள், கட்சிகளுக்கிடையிலான மாற்றங்கள் மற்றும் காலத்திற்கேற்ப மாறிய அரசியல் சூழ்நிலைகள் எனப் பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும், தனது அரசியல் சிந்தனைகளையும் சமூகப் பார்வையையும் வெளிப்படுத்தத் தயங்காதவராக விளங்கினார்.
சேகு இஸ்ஸதீன் அவர்களின் ஆளுமையில் மிகவும் தனித்துவமான அம்சமாக அமைந்தது அவரது இலக்கியப் பங்களிப்பாகும். 'வேதாந்தி' என்ற புனைபெயரில் கவிதைகள், சிறுகதைகள் மற்றும் பல்வேறு இலக்கியப் படைப்புகளை எழுதியுள்ளார். அவரது படைப்புகள் மனிதநேயம், சமூகப் பார்வை, தத்துவச் சிந்தனை மற்றும் அரசியல் அனுபவம் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தன.
'இருளின் நிழலில்' என்ற கவிதைத் தொகுப்பு அவரது இலக்கியப் பயணத்தில் குறிப்பிடத்தக்க படைப்பாகும். அத்துடன், 'வேதாந்தியின் கவிதைகள்' என்ற பெயரிலும் அவரது கவிதைகள் நூலாக வெளியிடப்பட்டுள்ளன. அவரது இலக்கிய ஆளுமையைப் பேராசிரியர் கா. சிவத்தம்பி அவர்கள் பாராட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
அரசியல் அதிகாரமும் இலக்கியச் சிந்தனையும் ஒன்றிணைந்த அவரது வாழ்க்கை, அவரை ஏனைய அரசியல் ஆளுமைகளிடமிருந்து வேறுபடுத்திக் காட்டியது.
வேதாந்தி சேகு இஸ்ஸதீன் அரசியலில் பல்வேறு பதவிகளை வகித்திருந்தாலும், இலக்கியத்துடனான தனது உறவை ஒருபோதும் கைவிடவில்லை. மனிதநேயத்தையும் அறிவார்ந்த சிந்தனையையும் இலக்கியத்தின் முக்கிய அடிப்படைகளாகக் கருதியவர். முஸ்லிம் சமூகத்தின் அரசியல் எதிர்காலம், கிழக்கு மாகாணத்தின் முக்கியத்துவம், சமூக உரிமைகள் மற்றும் அரசியல் சுயநிர்ணயம் போன்ற விடயங்களில் தனித்துவமான கருத்துக்களை முன்வைத்தார்.
அவரது உரைகளிலும் எழுத்துக்களிலும் வெளிப்பட்ட நகைச்சுவை உணர்வு, ஆழமான சிந்தனை மற்றும் விமர்சனப் பார்வை ஆகியன அவருக்கெனத் தனித்துவமான அடையாளத்தை உருவாக்கின.
2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 28ஆம் திகதி, தனது 80ஆவது வயதில் அக்கரைப்பற்றில் அவர் காலமானார். அவரது மறைவு இலங்கை முஸ்லிம் அரசியல் மற்றும் இலக்கியத் துறைகளில் குறிப்பிடத்தக்க இழப்பாக அமைந்தது.
ஒருபுறம் அரசியல் தலைவராகவும், மறுபுறம் கவிஞராகவும் எழுத்தாளராகவும் வாழ்ந்த அவரது வாழ்க்கை, அரசியலுக்கும் இலக்கியத்திற்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்தும் சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
எம்.எச். சேகு இஸ்ஸதீன் அவர்கள் வெறுமனே ஒரு முன்னாள் அமைச்சர் அல்லது அரசியல்வாதி மட்டுமல்லர். அரசியல் அனுபவம், சட்ட அறிவு, இலக்கியப் புலமை மற்றும் சமூகச் சிந்தனை ஆகிய பல்வேறு ஆளுமைப் பண்புகளைக் கொண்டிருந்தவர்.
அவரது அரசியல் பயணத்தில் கருத்து வேறுபாடுகளும் விமர்சனங்களும் இருந்திருக்கலாம். எனினும், இலங்கை முஸ்லிம் அரசியலின் ஆரம்பகால வளர்ச்சியில் அவர் வகித்த பங்கையும் தமிழ் இலக்கியத்திற்கு அவர் வழங்கிய பங்களிப்பையும் வரலாற்றுப் பார்வையில் மதிப்பீடு செய்வது அவசியமாகும்.
அந்த வகையில், அரசியலிலும் இலக்கியத்திலும் இரு தனித்துவமான அடையாளங்களை ஒருங்கே தாங்கி வாழ்ந்த அவரது பெயர், இலங்கை முஸ்லிம் அரசியல் வரலாற்றிலும் தமிழ் இலக்கிய வரலாற்றிலும் என்றும் நினைவுகூரத்தக்கதாகும்.
தேசகீர்த்தி ஏ. அப்துல் கபூர்
ஓய்வுநிலை அதிபர்,
முன்னாள் கல்முனை பிரதேச சபை உறுப்பினர்,
நற்பிட்டிமுனை.
