எம்.யூ.எம்.சனூன்
புத்தளத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற சம்பவத்தின் உண்மைத் தன்மை தொடர்பாக புத்தளம் மாநகர சபையின் மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் பொதுமக்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
புத்தளம் மாநகர சபையானது இன, மத, மொழி பேதமின்றி அனைத்து மக்களுக்கும் சமமான சேவைகளை வழங்குவதையும், நகரின் அபிவிருத்தி, மக்கள் நலன், சுத்தம் மற்றும் சுகாதாரமான வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு தொடர்ச்சியாகச் செயல்பட்டு வருகின்றது.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களும் மக்கள் நலப் பணிகளும் புத்தளத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறான சூழலில், நகரின் அமைதியையும் ஒற்றுமையையும் சீர்குலைக்கும் வகையில் சில தரப்பினர் இன முரண்பாடுகளை உருவாக்க முயற்சிப்பது கவலைக்குரிய விடயமாகும்.
இடம்பெற்ற சம்பவமும் தற்செயலாக இடம்பெற்ற ஒன்றாக அல்லாமல், முன்கூட்டியே திட்டமிடப்பட்ட செயலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான உண்மைத் தன்மையை உரிய முறையில் விசாரித்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான நடவடிக்கைகளை நாம் ஏற்கனவே ஆரம்பித்துள்ளோம்.
எமது நிலைப்பாடு தெளிவானதாகவே உள்ளது. புத்தளம் நகரம் அனைத்து இன, மத மக்களும் ஒற்றுமையுடனும் சமாதானத்துடனும் வாழும் நகரமாகத் தொடர வேண்டும். அபிவிருத்திக்கும் மக்கள் நலனுக்கும் இனவாதம் ஒருபோதும் தடையாக இருக்கக்கூடாது.
உண்மையை நிலைநாட்டுவோம். சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம். புத்தளத்தின் ஒற்றுமையையும் அமைதியையும் பாதுகாப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.
