எம்.யூ.எம்.சனூன்
புத்தளம் தள வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகளை மேலும் மேம்படுத்தும் நோக்கில், வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் புதிய தலைவராக, தேசிய மக்கள் சக்தியின் போக்குவரத்து, கல்வி மற்றும் சுகாதாரம் தொடர்பாக புத்தளம் பிராந்திய இணைப்பாளராக செயற்பட்டு வரும் மொஹமட் ஜஹாஸ் அவர்களை சுகாதார அமைச்சு நியமித்துள்ளது.
புத்தளம் மாவட்ட மக்களின் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றும் புத்தளம் வைத்தியசாலையின் உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவ சேவைகளின் தரம், நோயாளர்களுக்கான வசதிகள் மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த அபிவிருத்திப் பணிகளை மேம்படுத்துவது புதிய குழுவின் முக்கிய பொறுப்பாகக் கருதப்படுகிறது.
புதிய தலைவரின் தலைமையில் அரச துறையினர், சுகாதாரப் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் வைத்தியசாலையின் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
புத்தளம் வைத்தியசாலையின் வளர்ச்சிக்கும், மாவட்ட மக்களின் சுகாதார நலனுக்கும் பயனளிக்கும் வகையில் புதிய குழுவினர் தமது பொறுப்புகளை அர்ப்பணிப்புடன் நிறைவேற்ற வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதே வேளை புதிய தலைவர் உள்ளிட்ட ஏனைய உறுப்பினர்களுக்கும் புத்தளம் மாநகர சபையின் மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மக்களின் நலன் மற்றும் புத்தளம் வைத்தியசாலையின் மேம்பாட்டிற்காக தங்களின் தலைமைத்துவத்தின் கீழ் பல சிறப்பான அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

