JobVibe.lk - Sri Lanka Job Portal

இலங்கை கடற்படையின் புதிய பிரதிப் பிரதானியாக ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன நியமனம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

இலங்கை கடற்படையின் புதிய பிரதிப் பிரதானியாக ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன ஞாயிற்றுக்கிழமை (2026 நவம்பர் 22) முதல் நியமிக்கப்பட்டுள்ளதுடன், இதற்கான நியமனக் கடிதத்தை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, கடற்படைத் தலைமையகத்தில் வைத்து ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தனவிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

கேகாலை, தோலங்கமுவ டட்லி சேனாநாயக்க மத்திய கல்லூரியின் பழைய மாணவரான ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன, 1992 ஆம் ஆண்டு ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் 10 ஆவது ஆட்சேர்ப்பைச் சேர்ந்த கெடட் அதிகாரியாக இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவில் இணைந்துகொண்டார். தனது அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து, 1994 ஆம் ஆண்டு பதில் சப் லெப்டினன்ட் அதிகாரியாக நியமிக்கப்பட்ட அவர், 1996 ஆம் ஆண்டு கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் இயந்திரப் பொறியியல் தொடர்பான விஞ்ஞான இளமானிப் பட்டத்தைப் பெற்றார். தொடர்ந்து, 1999 ஆம் ஆண்டு கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் சப் லெப்டினன்ட் தொழில்நுட்பப் பாடநெறியையும், 2002 ஆம் ஆண்டு இந்தியக் கடற்படையில் நீரியல் அளவையியல் பாடநெறியையும் வெற்றிகரமாகப் பூர்த்தி செய்து, நீரியல் அளவையியல் துறையில் நிபுணத்துவம் பெற்றார்.

ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன, 2004 ஆம் ஆண்டு பங்களாதேஷில் தனது கனிஷ்ட கடற்படைப் பணியாளர் பாடநெறியையும், 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் பாடநெறியையும், 2010 ஆம் ஆண்டு இந்தியாவில் நீண்டகால நீரியல் அளவையியல் பாடநெறியையும் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார்.

மேலும், இந்தியாவின் கோவா பல்கலைக்கழகத்தில் நீரியல் அளவையியல் விஞ்ஞானத்தில் முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ளார். தனது தொழில்சார் கல்வியைத் தொடர்ந்து முன்னெடுத்து, இந்திய தேசிய பாதுகாப்புக் கல்லூரியில் பாதுகாப்பு மற்றும் மூலோபாயக் கற்கைகள் தொடர்பான பாடநெறியைப் பூர்த்தி செய்ததுடன், இந்தியாவின் மெட்ராஸ் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் மூலோபாயக் கற்கைகள் தொடர்பான முதுகலைத் தத்துவப் பட்டத்தையும் பெற்றுள்ளார். படிப்படியாகப் பதவி உயர்வுகளைப் பெற்று, 2024 ஆம் ஆண்டு ரியர் அட்மிரல் பதவிக்கு உயர்த்தப்பட்டார்.

தனது சேவைக் காலத்தில் இலங்கை கடற்படையின் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்துள்ள ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன, அதிவேகத் தாக்குதல் ரோந்துப் படகுகளின் கட்டளை அதிகாரியாகவும், நான்காவது அதிவேகத் தாக்குதல் படகுப் பிரிவின் கட்டளை அதிகாரியாகவும், இலங்கை கடற்படைக் கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டளை அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.

மேலும், தனது சேவைக் காலத்தில் சபுகஸ்கந்த பாதுகாப்புச் சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் கல்லூரியின் கல்வி ஆலோசகர், கடற்படை ஒழுக்காற்றுப் பாதுகாப்புப் பணிப்பாளர், கடற்படை ஆய்வுப் பணிப்பாளர், வடமத்திய கடற்படைக் கட்டளையின் பிரதித் தளபதி, மேற்கு கடற்படைக் கட்டளையின் பிரதித் தளபதி, வடமேல் கடற்படைக் கட்டளையின் தளபதி, பயிற்சிப் பணிப்பாளர் நாயகம் மற்றும் தெற்கு கடற்படைக் கட்டளையின் தளபதி உள்ளிட்ட கடற்படையின் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன, புதிய பிரதிப் பிரதானியாகவும், வடக்குக் கடற்படைக் கட்டளையின் தளபதியாகவும், கடற்படை நீரியல் அளவையியல் பிரிவின் பிரதானியாகவும் பணியாற்றும் இலங்கை கடற்படையின் புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரியாவார்.

மேலும், சுமார் முப்பது ஆண்டுகளாக இலங்கையில் நிலவிய பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கான மனிதாபிமான நடவடிக்கைகளில் தீவிரமாகப் பங்கேற்று, வெளிப்படுத்திய வீரதீரச் செயல்களுக்காக ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன வீரவிக்ரம விபூஷணய, ரணவிக்ரம பதக்கம் மற்றும் ரணசூர பதக்கம் ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

அத்துடன், அவரது சிறந்த சேவை, களங்கமற்ற நன்னடத்தை மற்றும் கடமையில் கொண்டுள்ள அர்ப்பணிப்பு ஆகியவற்றைப் பாராட்டி உத்தம சேவா பதக்கம் மற்றும் தேசபுத்ர விருதும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. 

மேலும், அவரது சேவைகளைப் பாராட்டி, இரண்டு சந்தர்ப்பங்களில் கடற்படைத் தளபதிகளால் பாராட்டுக் கடிதங்களும் வழங்கப்பட்டுள்ளன.

மேலும், விளையாட்டு வீரராகவும் சிறந்த திறமைகளை வெளிப்படுத்தியுள்ள ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன, கடற்படை மெய்வல்லுநர் அணியின், ஜூடோ மற்றும் மல்யுத்த அணிகளின் செயலாளராகவும், கடற்படை மெய்வல்லுநர் அணியின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன, திருமதி நாலிகா பெரேரா அவர்களைத் திருமணம் செய்துள்ளதுடன், துல்நெத் மற்றும் சென்மித் ஆகிய இருவரும் அவர்களது புதல்வர்கள் ஆவர்.









Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال