JobVibe.lk - Sri Lanka Job Portal

புத்தளம் கரைத்தீவு ஜனாஸா நலன்புரி அமைப்புக்கு 62 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஜனாஸா வாகனம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

எம்.யூ.எம்.சனூன்

புத்தளம் கரைத்தீவு ஜனாஸா நலன்புரி அமைப்பின் ஜனாஸா சேவையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், கரைத்தீவு மக்களின் அவசரத் தேவைகளையும், ஜனாஸா பராமரிப்புப் பணிகளின் இலகுவையும் கருத்திற்கொண்டு, மரணித்த சகோதரர் ஒருவரின் நினைவாக அவரது குடும்பத்தினரால் சுமார் 62 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஜனாஸா வாகனம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இந்த உயரிய கொடை, புத்தளம் கரைத்தீவு ஜனாஸா நலன்புரி அமைப்பின் சேவைப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.

மரணித்தவர்களை ஏற்றிச் செல்வதற்கும், ஜனாஸா நல்லடக்கத்திற்குத் தேவையான பொருட்களைக் கொண்டு செல்வதற்கும் இவ்வாகனம் பெரிதும் பயன்படவுள்ளது.

சமூகத்தின் சுமைகளைக் குறைத்து, இக்கட்டான தருணங்களில் மரணித்தவர்களுக்கு கண்ணியமான பிரியாவிடை வழங்குவதற்கும் இக்கொடை பெரும் துணையாக அமையும்.

இந்த மகத்தான நன்கொடையை வழங்கிய குடும்பத்தினருக்கு கரைத்தீவு ஜனாஸா நலன்புரி அமைப்பு, தனது ஆழ்ந்த நன்றிகளையும் மனமார்ந்த பிரார்த்தனைகளையும் தெரிவித்துக் கொள்கிறது.

இந்த நன்கொடையானது, நிரந்தர தர்மம் எனும் ஸதகா ஜாரியாவாக அமைந்து, அதன் நன்மைகள் மரணித்த சகோதரருக்கும், இதனை வழங்கிய குடும்பத்தினருக்கும் தொடர்ந்து கிடைத்துக்கொண்டிருக்க வேண்டும் என பிரார்த்திக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா புத்தளம் நகரக் கிளையின் தலைவர் அஷ்ஷெய்க் ஜிப்னாஸ் மிஸ்பாஹி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

அன்றைய நிகழ்வில், அவர் ஜும்ஆ குத்பாவையும் நிகழ்த்தி, ஜனாஸா சேவையின் முக்கியத்துவம், சமூகப் பொறுப்பு மற்றும் மரணித்தவர்களுக்காகச் செய்யப்படும் நற்காரியங்களின் சிறப்புகள் தொடர்பாக எடுத்துரைத்தார்.

மேலும், ஜனாஸா வாகனத்தை அன்பளிப்பாக வழங்கிய குடும்பத்தினரின் உயரிய கொடையைப் பாராட்டி, மரணித்த சகோதரரின் மறுமை வாழ்விற்காகவும், நன்கொடை வழங்கிய குடும்பத்தினரின் நலன்களுக்காகவும் விசேட துஆப் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

சமூகத்தின் தேவையை உணர்ந்து, மரணித்த சகோதரரின் நினைவாக இவ்வாறான மகத்தான கொடையை வழங்கிய குடும்பத்தினரின் செயல், ஏனையோருக்கும் சமூக சேவையில் முன்வருவதற்கான சிறந்த முன்மாதிரியாக அமைகிறது.










Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال