✍️ எஸ்.கே
காத்தான்குடியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ள கழிவு முகாமைத்துவ நிலையம் என்பது ஒரே நாளில் உருவான திட்டமல்ல. பல ஆண்டுகளுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தொலைநோக்குச் சிந்தனை, திட்டமிடல் மற்றும் நிர்வாக முன்னெடுப்புகளின் விளைவாகவே இந்தத் திட்டம் உருவெடுத்துள்ளது.
குறிப்பாக, கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களின் வழிகாட்டலும், முன்னெடுப்புகளும் இத்திட்டத்தின் அடித்தளத்தை அமைப்பதில் முக்கிய பங்காற்றியிருந்தன.
அரசியல் சூழல்கள் மாறலாம்; ஆட்சிகள் மாறலாம்; நிர்வாகப் பொறுப்புகளில் இருப்பவர்களும் மாறலாம். ஆனால், மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகளின் உண்மையான வரலாற்றை மாற்றியமைக்க முடியாது.
ஒரு திட்டத்தின் இறுதிக்கட்டத்தில் நடைபெறும் திறப்பு விழா மட்டுமே அதன் முழுமையான வரலாறாகிவிடாது. அதற்கான ஆரம்ப முயற்சிகள், திட்டமிடல்கள் மற்றும் பல ஆண்டுகளாக உழைத்தவர்களின் பங்களிப்புகளும் உரிய அங்கீகாரத்தைப் பெற வேண்டும்.
தற்போதைய நிர்வாகம் இத்திட்டத்தை மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்துள்ளமையும் பாராட்டுக்குரியது. அதேவேளை, இத்திட்டத்திற்கான அடித்தளத்தை அமைத்தவர்களின் பங்களிப்புகளையும் மறந்துவிட முடியாது.
காத்தான்குடி மக்கள் அரசியல் நிகழ்வுகளையும் அபிவிருத்திப் பணிகளையும் உன்னிப்பாகக் கவனிப்பவர்கள். யார் எப்போது என்ன செய்தார்கள் என்பதையும், எந்தத் தலைமைத்துவத்தின் கீழ் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டன என்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள்.
காத்தான்குடியின் அபிவிருத்திக்காகக் கலாநிதி ஹிஸ்புல்லாஹ் அவர்கள் முன்னெடுத்த பல்வேறு முயற்சிகளின் வரிசையில், இந்தக் கழிவு முகைமைத்துவ நிலையமும் மற்றுமொரு முக்கிய மைல்கல்லாகும்.
திறப்பு விழாக்கள் ஒரு நிகழ்வு மட்டுமே.., ஆனால் அதன் பின்னணியில் உழைத்தவர்களின் பங்களிப்பே உண்மையான அபிவிருத்தி வரலாறு. அந்த வரலாற்றை மக்கள் ஒருபோதும் மறந்துவிட மாட்டார்கள்.
