38 வது தொடர்...........
சர்வதேச இராணுவ வல்லுனர்கள் ஆச்சர்யப்படும் விதத்தில் LTTE யினர் போர்க்களத்தில் பல அற்புத சாதனைகளை செய்துள்ளனர். ஆனால் இராஜதந்திர நகர்வில் பல தவறுகளை செய்துள்ளனர். அரசியல் நகர்வுகள் சரியாக அமைந்திருந்தால், இன்றும் தோற்கடிக்க முடியாத சக்தியாக LTTE யினர் இருந்திருப்பர்.
LTTE யினரின் தவறுகளில் ஒன்றுதான் வடக்கு மாகாணத்திலிருந்து ஒரு சிறுபான்மை சமூகத்தை முற்றாக வெளியேற்றியது மற்றும் கிழக்கில் படுகொலை செய்தது.
1990 இல் வடக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றியதனை பின்னாட்களில் ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா அரசு, அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தியது.
அதாவது LTTE யினரை பயங்கரவாத அமைப்பாக தடை செய்வதன் மூலம், ஐரோப்பா மற்றும் ஏனைய மேற்கு நாடுகளில் LTTE யினருக்கான நிதி வசூல் மற்றும் அவர்களது செயற்பாடுகளை கட்டுப்படுத்த முடியும் என்று திட்டமிட்டது. அதற்காக வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதனையும் ஓர் பிரச்சாரமாக மேற்கொண்டு அதில் சந்திரிக்கா அரசு வெற்றி கண்டது.
வடக்கில் LTTE யினரின் நிருவாக முறைமை சிறப்பானது. அது அனைவரையும் கவர்ந்தது ஆனால் கிழக்கில் அவ்வாறு இருக்கவில்லை.
ஒரு துன்பத்துக்கு பின்பு நலவு இருக்கும் என்பார்கள். அதுபோல் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டது துன்பமாகவும், இழப்பாகவும் இருந்தாலும், பல விடயங்களில் வடக்கு முஸ்லிம்களுக்கு ஓர் நலவும் இருந்துள்ளது.
1995 இறுதியில் யாழ் குடாநாட்டைக் கைப்பற்றும் “ரிவிரச” இராணு நடவடிக்கையின்போது முஸ்லிம்கள் அங்கு இருந்திருந்தால், அவர்கள் வன்னியை நோக்கி இடம்பெயர்ந்து செல்வதுடன், இராணுவத்துக்கு தகவல் வழங்கினார்கள் என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கும்.
அதுபோன்று பின்னாட்களில் வடக்கு நோக்கி அவ்வப்போது ஏராளமான இராணுவ நடவடிக்கையும், அதனால் அடிக்கடி தமிழ் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்த அவலங்களும் இடம்பெற்றது. முஸ்லிம் மக்கள் இருந்திருந்தால், அவர்களுக்கும் அடிக்கடி இடம்பெயர்வுகள், அவலங்கள் ஏற்பட்டிருக்கும்.
எனவே LTTE யினர் முஸ்லிம்களை வெளியேற்றியதில் ஓர் நலவும் இருந்துள்ளது என்று எடுத்துக் கொள்ள முடியும்.
1990 இல் வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதனை கருப்பு ஒக்டோபர் “Black October” என்று வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது கிழக்கில் ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களில் ஏராளமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டதன் பின்பு நடந்த சம்பவமாகும்.
15.10.1990 தொடக்கம் 30.10.1990 வரையிலான நாட்களில் 75,000 க்கு மேற்பட்ட முஸ்லிம்கள் வட மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
வடக்கில் முஸ்லிம்களும், தமிழர்களும் நீண்டகாலமாக மிகவும் நெருக்கமாக வாழ்ந்து வந்தனர். திடீரென முஸ்லிம்களை வெளியேறுமாறு கூறப்பட்டதும், முஸ்லிம்கள் மட்டுமல்ல தமிழர்களும் அதிர்ச்சியடைந்தனர்.
LTTE யினரின் முடிவினை மீள்பரிசீலனை செய்யுமாறு கோரி இந்து மதகுருமார்கள், கிறிஸ்தவ பாதிரிகள் மற்றும் பல முக்கியஸ்தர்களும் முயற்சி செய்தனர். ஆனால் LTTE யின் தலைமைபீடம் எடுத்த முடிவினை மாற்றுவதற்கு மறுத்துவிட்டனர்.
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் ஓர் முஸ்லிம் வர்த்தகருக்கு சொந்தமான கடையில் சுமார் 75 வாள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதில் சந்தேகம் உருவானதாகவும் DBS. ஜெயராஜ் எழுதிய வரலாற்று நூலில் கூறப்படுகிறது. இது போன்ற சம்பவங்கள் முஸ்லிம்களை வெளியேற்றுவதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.
அத்துடன் முஸ்லிம்கள் மத்தியில் தனித்துவ அரசியல் அடையாளமாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் எழுச்சியினை LTTE யினர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதாவது தமிழ் பேசும் அனைவரும் ஒரே தேசிய அடையாளத்துக்குள் இருக்க வேண்டும் என்பது LTTE யினரின் நிலைப்பாடாகும்.
LTTE யினர் முஸ்லிம்களை வெளியேற்றியதானது, அவர்களது தனித்துவ அரசியல் நிலைப்பாட்டுக் கொள்கையும் ஓர் காரணம் என்று சர்வதேச மன்னிப்புச்சபை குறிப்பிட்டுள்ளது.
முஸ்லிம்கள் மத்தியில் உளவாளிகள் இருந்ததாக கூறப்படுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனெனில் வடக்கில் இருந்த அனைத்து முஸ்லிம்களும் உளவாளிகள் அல்ல. LTTE க்கு ஆதரவானவர்கள் ஏராளமானவர்கள் இருந்தார்கள்.
அவ்வாறு LTTE யினர் கூறுவது போன்று உளவாளிகள் இருந்தால் அவர்களை கண்டுபிடித்து தண்டித்திருக்கலாம். பெரும்பாலான தமிழ் இயக்கங்கள் LTTE க்கு எதிரானவைகள். அவ்வியக்கங்கள் உருவானது வடக்கில். அத்துடன் அரச படைகளுக்கு நேரடியாக உதவுவது இவ்வியக்கங்கள். அவ்வாறானவர்களை LTTE யினரால் எவ்வாறு கட்டுப்படுத்த முடிந்தது.
15.10.1990 :- யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் சுமார் ஆயிரம் பேர் ஆயுத முனையில் வெளியேற்றப்பட்டனர்.
21 – 26.10.1990 :- மன்னார் மாவட்டத்தின் எருக்கலம்பிட்டி உள்ளிட்ட முஸ்லிம் கிராமங்களில் வீடுகள் சுற்றி வளைக்கப்பட்டு பணம், நகைகளைப் பெற்றுக்கொண்டு வெளியேற்றப்பட்டனர்.
22 – 23.10.1990 :- முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவத்துக்கு தகவல் வழங்கியதாக சில முஸ்லிம் இளைஞர்கள் கைது செய்யப்பட்டதுடன், முல்லைத்தீவு மாவட்ட முஸ்லிம்கள் ஒரு வாரத்துக்குள்ளும், கிளிநொச்சி மாவட்ட முஸ்லிம்கள் ஐந்து நாட்களுக்குள்ளும் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது.
28.10.1990 :- மன்னார் தீவில் எருக்கலம்பிட்டி, தாராபுரம், புதுக்குடியிருப்பு, உப்புக்குளம் மற்றும் கொந்தைப்பிட்டி ஆகிய பகுதி முஸ்லிம்கள் கடற்கரையோர இடங்களில் ஒன்று கூட்டப்பட்டு பின்பு அவர்கள் கடல் வழியாக கற்பிட்டிக்கு அனுப்பப்பட்டனர்.
30.10.1990 :- யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரி மைதானத்தில் முஸ்லிம் குடும்பங்களின் பிரதிநிதிகள் ஒன்று கூட்டப்பட்டு LTTE தலைவர்களின் பாதுகாப்பு காரணங்களை கூறி இரண்டு மணி நேரத்துக்குள் யாழ் நகரைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டது. அவர்களது பணம், நகை, ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
வட மாகாணத்தின் வவுனியா நகரம் மற்றும் நயினாதீவு ஆகியவை அரசாங்கத்தின் முழுமையான கட்டுப்பாட்டின்கீழ் இருந்ததன் காரணமாக அங்குள்ளவர்களை வெளியேற்ற முடியவில்லை.
வட மாகாண முஸ்லிம்களை வெளியேற்றுவதற்காக LTTE யினர் முன்வைத்த வெளிப்படையான காரணங்களை நாங்கள் ஏற்றுக்கொண்டாலும், முஸ்லிம்களின் அசையும் பெறுமதியான சொத்துக்கள் மற்றும் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 500/= ரூபாய்க்கு மேல் பணம் கொண்டுசெல்ல அனுமதிக்கப்படவில்லை என்பதுதான் LTTE யினர் கூறிய காரணங்களை ஏற்கமுடியவில்லை.
முஸ்லிம்களின் வெளியேற்றத்திற்கு பின்புதான் LTTE யினரின் சொத்துக்கள் அதிகரித்ததாக சில ஆய்வுகள் கூறுகின்றன.
தொடரும்..........
முகம்மத் இக்பால்
சாய்ந்தமருது
