JobVibe.lk - Sri Lanka Job Portal

“கல்வியின் நன்மைகள் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும்.” - கெகுணகொல்ல தேசிய பாடசாலையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய

கல்வியின் நன்மைகள் சமூகத்தின் ஒரு பகுதியினருக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படக்கூடாது என்றும், ஒரு பிள்ளையின் எதிர்காலம் அவர் பிறந்த குடும்பத்தின் பொருளாதார நிலைமை அல்லது வாழும் பிரதேசத்தின் அடிப்படையில் தீர்மானிக்கப்படக்கூடாது என்றும், மாறாக அவர்களின் முயற்சிகளையும் ஆற்றல்களையும் வளர்த்துக்கொள்வதற்குக் கிடைக்கும் வாய்ப்புகளின் அடிப்படையிலேயே தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

குருநாகல், கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் நூற்றாண்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

நூறு ஆண்டுகள் என்பது ஒரு பாடசாலையின் வரலாற்றில் ஒரு மைல்கல் மட்டுமல்ல, பல தலைமுறைகளின் கனவுகள், எதிர்பார்ப்புகள், அர்ப்பணிப்புகள் மற்றும் வெற்றிகளுடன் பின்னிப் பிணைந்த நீண்ட பயணமாகும் எனக் குறிப்பிட்ட பிரதமர், இந்த நூற்றாண்டு காலப்பகுதியில் கெகுணகொல்ல தேசிய பாடசாலை ஆயிரக்கணக்கான பிள்ளைகளின் வாழ்க்கைக்கு ஒளியூட்டியதுடன், அவர்களின் எதிர்காலத்திற்கும் வழிகாட்டியுள்ளது எனத் தெரிவித்தார்.

அத்துடன், இந்த நீண்ட பயணத்திற்கு அடித்தளமிட்ட முன்னோடிகளின் அர்ப்பணிப்பு, அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் சேவை, பெற்றோரின் பங்களிப்பு ஆகியவற்றையும் அவர் கௌரவத்துடன் நினைவுகூர்ந்தார்.

கல்வி என்பது பரீட்சைகளில் சித்தியடைவதற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல என்றும், அறிவு, படைப்பாற்றல், சகோதரத்துவம் மற்றும் மனிதநேயம் நிறைந்த உண்மையான நற்பண்புகளைக் கொண்ட பிரஜைகளை உருவாக்குவதே ஒரு பாடசாலையின் அடிப்படைப் பொறுப்பாகும் என்றும் பிரதமர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, குருநாகல் போன்ற பல்வேறு இனத்தவர்களும் கலாசாரங்களும் இணைந்து வாழும் பிரதேசத்தில், ஒருவருக்கொருவர் மத மற்றும் கலாசார அடையாளங்களுக்கு மதிப்பளித்து ஒத்துழைப்புடன் வாழ்வதற்கு பிள்ளைகளுக்கு வழிகாட்டுவதன் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தினார். 

மேலும், அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்படும் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் சில பாடத்திட்டங்களை மாற்றுவதற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், முழுக் கல்விச் செயன்முறையையும் நவீனமயப்படுத்தும் வேலைத்திட்டமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, 2027ஆம் ஆண்டில் 2ஆம் தரம் மற்றும் 6ஆம் தரம் ஆகியவற்றுக்கான புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார். 

பாட அறிவு, கற்பித்தல் முறைகள், ஆசிரியர் பயிற்சி, பௌதிக மற்றும் தொழில்நுட்ப வளங்கள் உள்ளிட்ட கல்வியின் ஐந்து பிரதான தூண்களையும் வலுப்படுத்தி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற பாடசாலைகளுக்கு இடையில் காணப்படும் வசதிகள் தொடர்பான இடைவெளியைக் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில், வடமேல் மாகாண ஆளுநர் திஸ்ஸ வர்ணசூரிய, விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன, பாராளுமன்ற உறுப்பினர்களான எம். கே. எம். அஸ்லம், கீதா ஹேரத், ஜி. டி. சூரியபண்டார உள்ளிட்ட அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், வலயக் கல்விப் பணிப்பாளர், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த பெருந்தொகையான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

நன்றி - விடியல் 
















Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال