JobVibe.lk - Sri Lanka Job Portal

அலிஞ்சிப்பொத்தானை, முதுகல், கரப்பொல, பள்ளியகொடெல்ல ஆகிய முஸ்லிம், தமிழ் கிராமங்கள் மீதான தாக்குதல்.

40 வது தொடர்.............   

கிழக்கு மாகாணத்தை எல்லையாகக் கொண்ட பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் மீது இடம்பெற்ற படுகொலைகளும் அதனால் முஸ்லிம், தமிழ் மக்கள் எதிர்கொண்ட இழப்புக்கள் பற்றியும் இங்கே ஆராய வேண்டி உள்ளது. 

இதில் LTTE யினர் முஸ்லிம் கிராமம் மீது நடத்திய தாக்குதலும், அதற்கு பழிவாங்கும் விதமாக தமிழ் கிராமம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களையும் சர்வதேச மன்னிப்புச்சபையின் அறிக்கையினை ஆதாராமாகக் கொண்டு தனித்தனியாக ஆராய்வோம்.   

29.04.1992 அன்று அதிகாலை பொலன்னறுவ மாவட்டத்தின் வெலிகந்தை பிரதேசத்தை சேர்ந்த “அலிஞ்சிப்பொத்தானை” என்னும் முஸ்லிம் கிராமம் மீது ஆயுதங்கள் மூலம் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது.  

துப்பாக்கிச் சத்தத்தை கேட்ட பொது மக்கள் வீட்டைவிட்டு வெளியே வந்தவுடன், துப்பாக்கியால் சுடப்பட்டும், வயனைட் கத்திகளினால் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட பொதுமக்கள் அறுக்கப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பாக அப்போது பேசப்பட்டது. 

இந்தத் தாக்குதலில் 62 முஸ்லிம் பொது மக்கள் கொல்லப்பட்டதுடன், பலர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். இந்தத் தாக்குதலினால் அப்பகுதியில் வசித்த முஸ்லிம் மக்கள் மத்தியில் மட்டுமல்லாது, ஏனைய கிராம மக்கள் மத்தியிலும் அச்சத்தை ஏற்படுத்தியதுடன், எந்த நேரத்திலும் தாங்கள் தாக்கப்படலாம் என்ற உணர்வு ஏற்பட்டது. 

இந்த சம்பவம் நடைபெற்று சில மணி நேரங்களின் பின்பு அதாவது அதே தினத்தில் அருகிலுள்ள “முதுகல், கரப்பொல” ஆகிய தமிழ் கிராமங்கள் மீது பழிவாங்கும் விதமான தாக்குதல் இடம்பெற்றது. 

சர்வதேச மன்னிப்புச் சபையின் அறிக்கையின்படி, இந்த தாக்குதலில் அரச படைகளுடன் இணைந்து முஸ்லிம் ஊர்காவல் படையினர்களும் கலந்துகொண்டதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது. இது அலிஞ்சிப்பொத்தானை முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலுக்கு பழிவாங்கும் தாக்குதலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

இங்கே பழிவாங்கும் தாக்குதல் என்று குறிப்பிடுவது ஒரு நியாயப்படுத்தல் அல்ல, எவராக இருந்தாலும் எதுவும் அறியாத அப்பாவி பொது மக்கள் மீதான தாக்குதலை நியாயப்படுத்த முடியாது.  

1994 ஆம் ஆண்டின் அறிக்கையின்படி, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம், முதுகல் கிராமத்தில் 51 பேரும், கரப்பொல கிராமத்தில் 38 பேரும் கொல்லப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த தாக்குதலுக்கு பின்னர் பாதுகாப்புப் படையினர் மற்றும் அவர்களுடன் இணைந்து செயற்பட்ட ஊர்காவல் படையினர்கள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. 

1990 ஜூன் 11 இல் ஆரம்பமான இரண்டாவது ஈழப்போருக்கு பின்பு முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலும், அதற்கு பழிவாங்கும் விதமாக தமிழ் மக்கள் மீதான தாக்குதலும் கிழக்கு மாகாணம் முழுவதும் பரவலாக இடம்பெற்று வந்தது. 

அதாவது ஒரு சிறுபான்மை சமூகத்தின் புனிதமான விடுதலைப் போராட்டமானது, இன்னுமொரு சிறுபான்மை இனத்துடனான வன்முறைகளாக மாறியது.  

இந்த சம்பவம் குறித்து 07.05.1992 அன்று மூன்று பேர்கொண்ட விசாரணைக் குழு ஒன்றினை அரசாங்கம் நியமித்திருந்தது. குறித்த குழுவானது 29.05.1992 அன்று தனது அறிக்கையினை பாதுகாப்பு அமைச்சிடம் சமர்பித்தது. 

பள்ளியகொடெல்ல முஸ்லிம் கிராமம் மீதான தாக்குதல். 

அலிஞ்சிப்பொத்தானை படுகொலை இடம்பெற்று சில மாதங்களில் பொலன்னறுவை மாவட்டத்தின் பள்ளியகொடெல்ல கிராமம் மீது 15.10.1992 அன்று அதிகாலை பள்ளியகொடெல்ல மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்கள் மீது துப்பாக்கிகள் மூலமாக தாக்குதல் இடம்பெற்றது. இந்தத் தாக்குதலை LTTE மேற்கொண்டதாக பதிவாகியுள்ளது. 

இதிலிருந்து உயிர் தப்பியவர்களின் வாக்குமூலத்தின் பிரகாரம், அதிகாலை சுமார் நான்கு மணிக்கு ஆரம்பித்த இந்தத் தாக்குதலானது பல மணி நேரம் நீடித்ததாகவும், பள்ளிவாசலில் தஞ்சமடைந்த முஸ்லிம்களும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

பள்ளியகொடெல்ல தாக்குதலில் உயிரிழந்த முஸ்லிம் பொது மக்களின் எண்ணிக்கை 190 என்றும், பலர் காயமடைந்தனர் என்றும் கூறப்படுகின்றது. இதில் பெண்களும், முதியவர்களும், குழந்தைகளும் அடங்கும். 

இந்தப் படுகொலையானது முஸ்லிம்கள் எதிர்கொண்ட மிகக் கொடூரமான தாக்குதலில் ஒன்றாக பதிவு செய்யப்பட்டுள்ளது. 

முஸ்லிம் பொது மக்கள் மீது LTTE யினர் நடத்திய தாக்குதலை வெளிப்படுத்தும் அதேவேளை, அரச தரப்பினருடன் இணைந்து முஸ்லிம் ஊர்காவல் படையினர் தமிழ் மக்கள் மீதான தாக்குதலையும் மறைக்காமல் இரண்டு தரப்பிலும் உள்ள பொது மக்கள் அனுபவித்த துயரங்களை வெளிப்படுத்துவதுதான் தர்மமாகும். 

தொடரும்...............

முகம்மத் இக்பால் 

சாய்ந்தமருது




Previous Post Next Post
🌐 Select your Language ▼
  • 🍁 தமிழ்
  • 🇬🇧 English
  • 🦁 සිංහල

نموذج الاتصال