(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
இலங்கை வயம்ப பல்கலைக்கழகம் மற்றும் ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் மாணவர் குழுவினருக்காக, நீரியல் மற்றும் கடல்சார் புவிசார் தகவல்கள் தொடர்பான பயிற்சித் திட்டமொன்று செவ்வாய்க்கிழமை ( 27) கொழும்பிலுள்ள இலங்கை தேசிய நீரியல் அலுவலகத்தில் நடத்தப்பட்டது.
அதன்படி, வயம்ப பல்கலைக்கழகத்தின் நீர்வாழ் உயிரின வளர்ப்பு மற்றும் மீன்வளத் துறையைச் சேர்ந்த 14 மாணவர்களும், கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் கடல்சார் பொறியியல் மற்றும் கப்பல் கட்டிடக்கலைப் பொறியியல் கற்கைகள் துறையைச் சேர்ந்த 4 மாணவர்களும் என மொத்தம் 18 மாணவர்கள் இந்தப் பயிற்சித் திட்டத்தில் பங்கேற்றனர். இதன்போது, நீரியல் தொடர்பான அடிப்படைக் கோட்பாடுகள், பாதுகாப்பான கடற்பயணம், கடல்சார் பாதுகாப்பு, கரையோர அபிவிருத்தி மற்றும் கடல்சார் ஆராய்ச்சிகளுக்கு நீரியல் துறை வழங்கும் பங்களிப்பு தொடர்பாக விழிப்புணர்வு விரிவுரைகள் நடத்தப்பட்டன.
மேலும், நீரியல் அளவீட்டுப் பணிகளை மேற்கொள்வது மற்றும் கடல்சார் புவியியல் தகவல்களை வழங்குவது தொடர்பில் இலங்கை கடற்படையின் நீரியல் துறையின் பங்களிப்பு குறித்தும் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. அத்துடன், கடல்சார் புவிசார் தரவுகள், உட்கட்டமைப்பு வசதிகள், நீரியல் தரவு முகாமைத்துவ மையம் மற்றும் வரைபடமாக்கல் ஆகிய துறைகள் தொடர்பான புரிதலையும் மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மேலும், இப்பயிற்சித் திட்டத்தின் மூலம் மீன்பிடித் தொழில், கடல்சார் பொறியியல் துறை மற்றும் கடல்சார் ஆராய்ச்சிகள் ஆகியவற்றில் நீரியலின் நடைமுறைப் பயன்பாடுகள் தொடர்பான அறிவை விரிவுபடுத்திக்கொள்வதற்கும், கல்வி நிறுவனங்களுக்கும் நீரியல் துறைக்கும் இடையிலான அறிவுப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்திக்கொள்வதற்கும் வாய்ப்பு ஏற்பட்டது.






