(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – புத்தளம் நகரக் கிளையின் ஏற்பாட்டில், அல்அமீன் ஜும்ஆ மஸ்ஜித் நிர்வாகத்தின் ஒத்துழைப்புடன் சனிக்கிழமை (17) அல்அமீன் மஸ்ஜித் மஹல்லாவைச் சேர்ந்த 115 குடும்பங்களை இலக்காகக் கொண்டு வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்று முன்னெடுக்கப்பட்டது.
ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாகச் சென்று சமூக மேம்பாட்டுக்கான முக்கியமான நான்கு விடயங்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பின்வரும் நான்கு முக்கிய விடயங்கள் வலியுறுத்தப்பட்டன:
1. தொழுகையின் முக்கியத்துவம்: ஒவ்வொரு முஸ்லிமின் வாழ்விலும் ஐவேளைத் தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதன் அவசியம் குறித்து தெளிவுபடுத்தப்பட்டது.
2. தொழுகையைப் புறக்கணிப்பதன் விளைவுகள்: தொழுகையை விட்டுவிடுவதால் ஏற்படக்கூடிய ஆன்மிக மற்றும் சமூகப் பாதிப்புகள் எடுத்துரைக்கப்பட்டன.
3. போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் சீர்கேடுகள்: போதைப்பொருள் பாவனை தனிமனிதன், குடும்பம் மற்றும் சமூகத்தில் ஏற்படுத்தும் தீய விளைவுகள் தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
4. மகிழ்ச்சியான குடும்ப வாழ்வு: கணவன், மனைவி மற்றும் பிள்ளைகள் பரஸ்பர அன்பு, புரிந்துணர்வு, பொறுப்புணர்வு மற்றும் நல்லொழுக்கத்துடன் வாழ வேண்டியதன் முக்கியத்துவம் எடுத்துரைக்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட விடயங்கள் உள்ளடங்கிய விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களும் ஒவ்வொரு வீட்டிற்கும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா – புத்தளம் நகரக் கிளையின் பிரதிநிதிகள், அல்அமீன் ஜும்ஆ மஸ்ஜித்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அத்துடன், அஷ்ரபியா மத்ரஸா மாணவர்களும் இச்சமூகப் பணியில் ஆர்வத்துடன் பங்கேற்றமையும் குறிப்பிடத்தக்கது.








