நூருல் ஹுதா உமர்
கல்முனை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளைத் தாமதமின்றி நடைமுறைப்படுத்துமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இக்கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
கல்முனை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றும் முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் தமது மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப தலையை மூடும் ஆடைகள், நீண்ட கை ஆடைகள் மற்றும் காற்சட்டைகளை அணிந்து கடமையாற்றுவதில் எதிர்கொண்ட தடைகள் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை நடத்தி, அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தீர்மானித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் விரும்பினால் மீண்டும் கல்முனை ஆதார வைத்தியசாலையில் பணியாற்றுவதற்கான வாய்ப்பை வழங்குதல், மத அடையாள ஆடைகளுடன் கடமையாற்றுவதற்கு அனுமதிக்கும் எழுத்துமூல அறிவுறுத்தல்களை வெளியிடுதல், துன்புறுத்தல் மற்றும் அச்சுறுத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்துதல் உள்ளிட்ட முக்கிய பரிந்துரைகளை மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அனைத்து அரச நிறுவனங்களுக்கும் பொருந்தக்கூடிய வகையில் தெளிவான புதிய பொது நிர்வாகச் சுற்றறிக்கையொன்றை வெளியிடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இப்பரிந்துரைகளில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எல்.ரீ.பி. தெஹிதெனிய மற்றும் ஆணையாளர் நிமால் ஜீ. புஞ்சிஹேவ ஆகியோர் கையொப்பமிட்டுள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் மனித உரிமைகள் ஆணைக்குழு சுயாதீனமாகச் செயற்படுவது இதன் மூலம் உறுதிப்படுத்தப்படுவதாகத் தெரிவித்த ஹரீஸ், ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை உரிய அமைச்சுகளுக்கும் அதிகாரிகளுக்கும் வழங்கி, உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
