(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
யாழ்ப்பாணம், நயினாதீவில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நாகதீப புராண ரஜ மகா விகாரையின் வருடாந்த கடின புண்ணிய மகோற்சவம், 2026 ஒக்டோபர் மாதம் 27 மற்றும் 28ஆம் திகதிகளில், நாகதீப புராண ரஜ மகா விகாரையின் விகாராதிபதியும், வட இலங்கையின் பிரதம சங்கநாயக்கருமான அதி வணக்கத்திற்குரிய நவடகல பதுமகித்தி திஸ்ஸ தேரரின் அனுசாசனைகளுக்கு அமைய, இலங்கை கடற்படையின் பங்களிப்புடன் சிறப்பாக நடத்தப்பட்டது.
அதன்படி, வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தனவின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களுக்கு அமைய, வடக்கு கடற்படை கட்டளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தக் கடின புண்ணிய மகோற்சவத்தின் ஆரம்ப நிகழ்வாக, 2026 ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி, நயினாதீவு கடற்படைப் பிரிவிலிருந்து கடின சீவரம் வண்ணமயமான பெரஹெரவின் மூலம் நயினாதீவு தீவைச் சுற்றி மக்களின் வழிபாட்டிற்காக எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர், கடின சீவரம் கடற்படைப் பிரிவில் வைக்கப்பட்டதுடன், அன்றைய தினம் மாலை நாகதீப ரஜ மகா விகாரையில் கடற்படையின் பங்களிப்புடன் பௌத்த சமயச் சடங்குகள் இடம்பெற்றன.
நயினாதீவில் அமைந்துள்ள கடற்படைப் பிரிவிலிருந்து புதன்கிழமை (2026 ஒக்டோபர் 28) காலை, கடின சீவரம் நாகதீப விகாரைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, கடின சீவர பூஜை இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து, கடற்படைத் தளபதி, வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவின் பங்கேற்புடன், கௌரவத்திற்குரிய மகா சங்கத்தினருக்கு மதிய தானம் மற்றும் பரிக்கரப் பொருட்கள் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
மேலும், இந்தக் கடின புண்ணிய மகோற்சவத்தில் கடற்படைப் பிரதிப் பிரதம அதிகாரியும் கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே, வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன உள்ளிட்ட வடக்கு கடற்படை கட்டளையைச் சேர்ந்த சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், கடற்படையினர் மற்றும் பக்தர்கள் பலரும் பக்திபூர்வமாகக் கலந்துகொண்டனர்.







