(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)
எழுத்தின் வழியே சமூகத்தைச் சிந்திக்க வைக்கும் பயணத்தில், தனது படைப்பாற்றலுக்கும் சமூக அக்கறைக்கும் கிடைத்த அங்கீகாரமாக, புத்தளம் பிரதேச இலக்கிய விழா – 2026 இல் எழுத்தாளரும் கவிஞரும் சமூகப் பணியாளருமான பாத்திமா சுபியானி மூன்று இலக்கியப் போட்டிகளில் மூன்றாம் இடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
புத்தளம் பிரதேச செயலகம், கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் மாகாண கலாசாரத் திணைக்களம் ஆகியவற்றின் இணைந்த ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விலக்கிய விழாவில், திரைப்பட விமர்சனம், சிறுகதை மற்றும் புதுக்கவிதை ஆகிய மூன்று பிரிவுகளிலும் அவர் இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார்.
சொற்களின் வழியே சிந்தனைகளை விதைத்து, சமூகத்தின் பல்வேறு முகங்களைப் படைப்புகளின் ஊடாக வெளிப்படுத்தும் எழுத்துப் பயணத்தில், இந்த மூன்று விருதுகளும் அவருக்கு மேலும் உற்சாகமளிக்கும் மைல்கற்களாக அமைந்துள்ளன.
திரைப்பட விமர்சனத்திற்கான திறந்த பிரிவில், சிவகுமார் முருகேசன் இயக்கிய ‘தாய்க்கிழவி’ திரைப்படம் குறித்த அவரது விமர்சன ஆக்கம் மூன்றாம் இடத்தைப் பெற்றது. ஒரு திரைப்படத்தைப் பார்ப்பதுடன் நின்றுவிடாமல், அதன் உள்ளடக்கத்தையும் கருத்துகளையும் விமர்சன நோக்கில் அணுகிய அவரது படைப்புக்கு இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அதேபோன்று, சிறுகதைப் போட்டியின் திறந்த பிரிவில் ‘இணைய உலகின் தலைமை’ என்ற தலைப்பில் அவர் எழுதிய சிறுகதை மூன்றாம் இடத்தைப் பெற்றது. இன்றைய நவீன உலகில் இணையத்தின் தாக்கங்கள், அதன் சமூகப் பரிமாணங்கள் மற்றும் மனித வாழ்வில் அது ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்த சிந்தனைகளை மையமாகக் கொண்டு இச்சிறுகதை அமைந்துள்ளது.
மேலும், புதுக்கவிதைக்கான திறந்த பிரிவில் ‘போதையற்ற சந்தோசமான உலகம்’ என்ற தலைப்பில் அவர் படைத்த கவிதைக்கும் மூன்றாம் இடம் கிடைத்துள்ளது. போதைப் பழக்கங்களிலிருந்து விடுபட்ட, ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான சமூகத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் இக்கவிதை, சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவரது படைப்பாற்றலையும் வெளிப்படுத்துகிறது.
இம்மூன்று போட்டிகளிலும் பெற்ற வெற்றிகளுக்கான சான்றிதழ்களையும் விருதுகளையும் புத்தளம் பிரதேச செயலகத்தின் திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் H. R. M. D. T. திசாநாயக்க மற்றும் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் G. D. D. N. கம்லத் ஆகியோரிடமிருந்து அவர் பெற்றுக்கொண்டார்.
சமூகப் பிரச்சினைகள், மனித உரிமைகள், மனிதநேயம் மற்றும் சமூக மாற்றம் சார்ந்த விடயங்களைத் தனது எழுத்துக்களில் வெளிப்படுத்திவரும் புத்தளம் பாத்திமா சுபியானி, இலக்கியப் பணிகளுடன் சமூக சேவையிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது .



